சென்னை: மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மண்டலத்திற்கு மூன்று கரோனா தடுப்பூசி முகாம்கள் என 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
தற்பொழுது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளிகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கள், செப்டம்பர் முதல் தேதியிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மேலும், 45 இடங்களில் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம்கள் வார்ட்டிற்கு ஒரு முகாம் என, தடுப்பூசி முகாம்களை 200ஆக விரிவாக்கம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி, 200 வார்டுகளில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகாமையில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்ட காரணத்தினால் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
இந்த 200 தடுப்பூசி முகாம்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc_vaccine_centre என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த 200 வார்டுகளில் உள்ள தடுப்பூசி முகாம்களில் இணையதளம் வாயிலாக தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நேரம், இடத்தை தேர்வு செய்து கொள்ள மாநகராட்சியின் gccvaccine.in என்ற இணையதள இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி முகாம்கள் நாள்தோறும் காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் நேற்று வரை 27லட்சத்து 17ஆயிரத்து 705 பேருக்கு முதல் தவணை தடுப்பூசிகளும், 12லட்சத்து 11ஆயிரத்து 775 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 39லட்சத்து 29ஆயிரத்து 480 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
எனவே, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.