இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள கடிதத்தில், "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே என்றென்றும் வெல்லும்' அதிமுகவின் அன்பிற்குரிய, விசுவாசம் மிக்க கழக உடன்பிறப்புகளே, தமிழ் நாடு சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்னும் ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர் வெளியாக இருக்கும் நிலையில், 'வாக்குக் கணிப்பு' (எக்சிட் போல்) என்ற பெயரில் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும் செய்தித் தொகுப்புகள், கட்சியினர் யாருக்கும் எந்தவித மனசஞ்சலத்தையும் தரவில்லை என்பதைக் கேட்டுப் பெருமிதம் கொள்கிறோம்.
அதிமுக என்னும் ஆலமரம் எந்த சலசலப்புக்கும் அசைந்துவிடாமல், அண்டிவந்தோர் அனைவருக்கும் வாழ்வளிக்கும் கற்பக விருட்சம் என்பதே உண்மை. தமிழ் நாடு முழுவதிலும் இருந்து வருகின்ற தேர்தல் பணிகள் குறித்த தகவல்கள், அதிமுகவின் வரலாறு வியக்கும் வகையில் இந்தத் தேர்தலிலும் தொடர் வெற்றி பெற்று அரசை அமைக்கும் என்றே உறுதிபடத் தெரிவிக்கின்றன.
கடந்த 2016 சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன் வந்த அனைத்து கருத்துக் கணிப்புகளும், வாக்கு கணிப்புகளும் கழகத்தின் வெற்றியை குறிப்பிடவே இல்லை. மாற்று அணியே ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முதல் நாள் வரை சொல்லிக்கொண்டிருந்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய சில மணி நேரத்திலேயே கழகத்தின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இப்போது வெளியிடப்பட்டு வரும் கணிப்பு முடிவுகள் கழக உடன்பிறப்புகளை சோர்வடையச் செய்து, வாக்கு எண்ணிக்கையின் போது நமது செயல்பாடுகளை முடக்கி, நம்மை ஜனநாயகக் கடமை ஆற்றவிடாமல் செய்வதற்கான முயற்சிகளே தவிர வேறல்ல. நம்மை சோர்வடையச் செய்வதற்கான சூழ்ச்சிகள் எதையும் நம்பிவிடாமல் அவற்றை துணிவுடன் எதிர்கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.