தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊதியத் தொகை திருப்பி செலுத்தக் கூறிய உத்தரவை எதிர்த்த வழக்கு: முன்னாள் எம்எல்ஏ வாபஸ் - முன்னாள் எம்எல்ஏ வேல்துரை

சென்னை: சேரன்மாதேவியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது பெற்ற ஊதியத் தொகை 21 லட்சம் ரூபாயை திருப்பி செலுத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேல்துரை வாபஸ் பெற்றார்.

madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Sep 16, 2021, 7:28 AM IST

2006ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரையின் வெற்றியை எதிர்த்து, அந்தத் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேல்துரையின் வெற்றியை செல்லாது என அறிவித்து தீர்ப்பளித்தது.

அரசின் பதிவுபெற்ற ஒப்பந்ததாரராக இருந்ததால் அவரது தேர்தலை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் பெற்ற ஊதியத் தொகை 21 லட்சத்து 58 ஆயிரம் ரூபாயை திருப்பி செலுத்தும்படி, சட்டப்பேரவை செயலாளர், வேல்துரைக்கு உத்தரவிட்டார்.

முன்னதாக இதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ஊதியத்தை திருப்பிச் செலுத்த உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஊதியத்தை திருப்பிச் செலுத்தும்படி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதிகள் ராஜா, தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஊதியத் தொகையை திருப்பி செலுத்துவது தொடர்பாக மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்ததையடுத்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக வேல்துரை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்று, வழக்கை வாபஸ் பெற அனுமதித்த நீதிபதிகள், தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: வாகனங்களின் வேகத்தை மணிக்கு 100 கி.மீ. அதிகரித்து பிறப்பித்த அறிவிப்பு ரத்து!

ABOUT THE AUTHOR

...view details