சென்னை: ராயபுரம் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், "தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் நாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வீரவணக்கம் செலுத்தப்படுகிறது.
வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள பூச்சி முருகன் இல்லத் திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அப்போது கரோனா பரவாதா? இதில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, பொதுமக்களுக்கு ஒரு நீதி எனக் இருக்கிறது.
காவல்துறை அராஜகம் அதிகரித்துள்ளது
அண்ணா அறிவாலயத்தில் கரோனா அதிக அளவில் பரவ வாய்ப்புள்ளது. பூச்சி முருகன் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வருகை தந்தனர். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. காவல்துறை அராஜகம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனப் பொதுமக்கள் திமுக மீது கோபத்தில் இருக்கின்றனர். மேலும், அதிமுக மேல் மக்கள் பெரும் பாசமாகவும் இறக்கின்றனர். இதனால் உறுதியாக வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வியை திமுக சந்திக்கும்.
அறிவாலயத்தில் பூச்சி முருகன் இல்லத் திருமணத்திற்கு 500 முதல் 1000 பேர் கூட்ட முடிகிறது. கிராம சபை கூட்டத்தை கூட்ட முடியாதா? கிராம சபை கூட்டம் கூடினால் பொங்கல் பரிசு ஊழல் வெளிப்பட்டு விடும். மக்கள் கடும் கோபத்தில் உள்ள நிலையிலேயே கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.