சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திப்பது, கூட்டணி இடப்பங்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
காலை 10:30 மணியளவில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.
ஆலோசனைக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக போட்டியிட விரும்பும் இடங்களை பாஜக கேட்கிறது' என்றார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர் ஓ. பன்னீர்செல்வம் 'விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்' எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் , "கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்பாக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டோம். பாஜகவுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில் உடன்பாடுகள் எட்டப்படும். சுமுக சூழ்நிலையில் ஒருமித்த கருத்தோடு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு என்பதை கட்சி முடிவு செய்யும்.