தமிழ்த்தேசியத் தலைவராக தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 66ஆவது பிறந்தநாளை உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள், தமிழ்த்தேசிய பெருவிழாவாக கொண்டாடிவருகின்றனர்.
அந்த வகையில், சென்னையை அடுத்த மதுரவாயலில் தனியார் திருமண மண்டபத்தில் பிரபாகரனின் 66ஆம் ஆண்டு பிறந்தநாளை விழா, சீமான் தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இன்றைய நாள் வரலாற்றின் வீதிகளில் தாழ்ந்து வீழ்ந்து கிடந்த தமிழர் என்ற தேசிய இனம் தன்னைத் தானே தலை உயர்த்தி நிமிர்ந்து பார்க்கின்ற புனித நாள். அழித்தொழிக்கப்பட்ட அடிமைத்தேசிய இனமாக உலக வீதிகளில் நாம் அலைந்தாலும் நமது உள்ளத்துக்குள் எரிகின்ற விடுதலை நெருப்பு இன்னும் அணையாமல் இருப்பதற்கான 'ஒற்றைப் பெயர்' பிறந்த நன்னாள். அது நம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் பிறந்த புனிதத் திருநாள்.
இந்த உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு தேசிய இனமும் தனது மொழி, நிலம், உரிமைகள், பண்பாட்டு விழுமியங்கள், தேசிய இனத்தின் இறையாண்மை ஆகியவற்றைக் காப்பாற்ற போராடி வருகிற பெரும் கதையே உலக வரலாறாக அறியப்படுகிறது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி எனப் போற்றப்படுகின்ற தமிழர் என்கின்ற தேசிய இனமும் பன்னெடுங்காலமாக தனது மொழி, நிலம், பண்பாட்டு அடையாளங்களைக் காப்பாற்றுவதற்கு போராடி வருகிறது. காலம் காலமாக உயிரைத் துச்சமாகக் கருதி, மானத்தையும், வீரத்தையும் உயிராகக் கருதி களத்தில் நின்ற பெருமாவீரர்கள்தான் தமிழ்த்தேசிய இனத்தின் தெய்வங்களாக, இறை வடிவங்களாக மாறி இருக்கிறார்கள்.
வரலாற்றுப் பெருமிதங்கள் நிறைந்த தமிழர் வரலாற்றில் நேர் எதிர் நின்று எதிரிகளை நோக்கி மாபெரும் வீரத்துடன் வேலெடுத்து பாய்ந்த முருகன், வாளெடுத்து சுழன்று திசை எட்டும் புலிக்கொடி பறக்க வைத்த சோழன், என காலப் பெருமையின் நீண்டு துலங்கும் பட்டியலில் அறம் வழி நின்று மறம் போற்றி வாழ்ந்து, தன் பெயரை தங்க எழுத்துக்களால் பொறித்து தனித்துவம் கண்ட தலைவராக மிளிர்ந்து சுடர்கிற சூரியனாய் விளங்குபவர்தான் நமதுயிர்த் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
இந்த உலகில் வாழ்கின்ற 12 கோடி தேசிய இன மக்களைக் கொண்ட தமிழினத்தின் இருபெரும் தாய் நிலங்களாக தாயகத்தமிழகமும், தமிழீழமும் இருந்து வருகின்றன. நடுவே பாய்ந்துப் பூரிக்கின்ற கடலலைகள் இரு பெரும் நிலங்களையும் பிரித்தாலும் குருதி முழுவதும் நிறைந்திருக்கின்ற மரபணுக்களின் ஒத்திசைவு உணர்வால், ஒரு தாயின் வயிற்றில் தோன்றிய ஒரே கருவறைப் பிள்ளைகள் என்கின்ற உறவால் ஒற்றைத் தேசிய இனத்தின் மக்களாக தமிழராகிய நாங்கள் வாழ்கின்றோம்.
நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சி, எக்காலம் தோன்றியது என அறிய முடியாத அளவுக்கு இலக்கண, இலக்கிய செழுமைகளுடன் கூடிய மொழி முதுமை போன்ற பெரும் சிறப்புகள் தமிழினத்திற்கு இருந்தாலும் இறையாண்மையுடன் கூடிய ஒரு நாடு இல்லையே என்ற ஏக்கம் ஒவ்வொரு தமிழ் மகனின் மனதிற்குள்ளும் ஆழ்மனத்துக்கமாக பன்னெடுங்காலமாக இருந்து வந்தது. சிங்களப்பேரினவாத கரங்களுக்குள் நம் தாய் நாடான தமிழீழம் சிக்கித் தவித்த போது இதை மீட்க யாராவது எங்கிருந்தோ வர மாட்டார்களா? என்கிற தவிப்பு நம்மிடையே இருந்து வந்தது.
நம் மனதிற்குள் இருந்த அந்தத் துக்கத்தைத் துடைத்தெறிவதற்காக, ஏங்கித் தவித்த ஏக்கத்தை அழித்து முடிப்பதற்காக காலம் அளித்த கரிகாலனாக நம்மிடையே தோன்றி, சமகாலத்தில் தமிழர் என்ற தேசிய இனத்திற்கு முகமாக, முகவரியாக , ஊக்கமாக, ஆற்றலாக அடையாளமாக திகழ்பவர்தான் நம் தேசியத் தலைவர்.
தனது அறநெறிப் போற்றி வாழ்ந்த வாழ்க்கை முறையினால், ஓங்கி உயர்ந்த ஒழுங்கு நடவடிக்கைகளால் இதுவரை தோன்றிய புரட்சியாளர்களில் நம் தேசியத் தலைவர் பிரபாகரன் ஆகச் சிறந்தவராகிறார். படையின் எண்ணிக்கையில் வெற்றியல்ல; எண்ணத்தில்தான் வெற்றி என்பதைப் பாருக்கு எடுத்துச் சொன்னதோடு மட்டுமில்லாமல் அதை நடைமுறைப்படுத்தி வரலாற்றில் வீரக்காவியமாக மாற்றி நிறுத்தியதும் தலைவர் பிரபாகரன் மட்டும் தான்.