சென்னை: ஊரடங்கு காலத்தில் தடையை மீறி வெளியில் சுற்றித் திரிந்த எத்தியோப்பியாவைச் சேர்ந்த 8 பேருக்கு 3 மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க, கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசியத் தேவைகளை தவிர்த்து, பிற காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், மருத்துவ விசாவில் எத்தியோப்பியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த, ஆவல் முக்தர் சிபா, நீகஷ் பெட்டியா ஆவல், யூசப் செம்சூ ஜமால், முகம்மது ஹிகாரா கீமல், கெலில் முகதீன் ஹசன், சைடோ டெய்பெட் ரிசீத், ஹசன் இப்ராஹிம் ஒர்கூ, சையது மேக்கியா ஹம்சா ஆகியோர் தடையை மீறி மத பிரச்சாரம் செய்ததாகக்கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 8 பேரையும் தண்டையார்பேட்டை முகாமில் வைத்துள்ளனர். வழக்கை விசாரித்த 16 ஆவது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நடுவர் இசக்கியப்பன், குற்றவாளிகள் மத பிரச்சாரம் செய்ததற்கான எந்த ஆதாரத்தையும் அரசு தாக்கல் செய்யவில்லை என்றும், ஆனால், குற்றவாளிகள் தரப்பில் வெளியே சுற்றியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, முகாமில் அடைக்கப்பட்டுள்ள எத்தியோப்பியாவைச் சேர்ந்த 8 பேருக்கும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது எனவும், குற்றவாளிகள் ஏற்கனவே 35 நாட்கள் சிறையில் இருந்து விட்டதால், அந்நாட்களை கழித்து, மீத நாட்களை மட்டும் சிறையில் கழிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நெல்லையில் தப்பியோடிய கைதி வல்லநாட்டில் பிடிபட்டார்!