சென்னை:கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீனஸ் நகர் மெயின் ரோட்டிற்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் சேகரிக்கும் தொட்டியின் பணிகளை நேற்று (ஜூலை 24) பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் சென்னை எழும்பூர் ஈ.வே.ரா சாலையில் நடைபெற்று வரும் இணைப்பு கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, சென்னை வால்டாக்ஸி சாலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் பெத்தனாயக்கன் சாலை வரையிலான சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீனஸ் நகர் மெயின் ரோட்டிற்கு அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீர் சேகரிக்கும் தொட்டியின் பணிகளை பொதுப்பணிகளை நாங்கள் இன்று ஆய்வு செய்தோம். 80% பணிகள் நடைபெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதிக்குள் இப்பணிகள் முழுவதும் நிறைவடையும்.
மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய்கள்:கொளத்தூர் பகுதிகளில் தேங்கும் மழைநீர் தணிகாச்சலம் கால்வாய் வழியாக கொடுங்கையூர் கால்வாயினை சென்றடையும் வகையில், உள்வட்ட சாலையின் வலதுபுறத்தில் பெரிய மழைநீர் வடிகால் 250 மீட்டர் நீளத்திற்கு அமைக்கும் பணி ரூ.5 கோடி மதிப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணி அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்.