தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வழக்கு - தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாப் புகார் தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் புதிதாக புகாரளிக்க தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

highcourt
highcourt

By

Published : Dec 18, 2019, 3:13 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில், அபிராமபுரம் காவல் நிலையத்தில் யாருடைய பெயரும் குறிப்பிடப்படாமல் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் காலங்களில் பணப்பட்டுவாடாவை தடுக்கப் புதிய விதிமுறைகளை உருவாக்கக்கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷும், தேர்தலின் போது பணம் பெற்ற வாக்காளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அருண் நடராஜன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்குகள் விசாரணையில் இருந்த நிலையில், அபிராமபுரம் காவல் துறையினர் பதிவு செய்த வழக்கை தனி நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்குகள் இன்று மீண்டும் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வருமான வரித்துறை அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் பணப்பட்டுவாடாப் புகாரில் தொடர்புடைய அனைவர் மீதும், காவல் நிலையத்தில் புதிதாக புகாரளித்து வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு கடந்த அக்டோபர் 21ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து பணப்பட்டுவாடா தொடர்பான மதிப்பீட்டின் தற்போதைய நிலை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கு விசாரணை ஜனவரி 21ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: வாக்குக்காக பிரியாணி, பணம் கொடுப்பதாக எழுந்த புகார்

ABOUT THE AUTHOR

...view details