மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று தங்களது ஆளுமையை நிரூபிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல் அதிமுகவிலிருந்து கழற்றிவிடப்பட்ட டிடிவி தினகரன் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்று தேசியக் கட்சிகளை தன்னை நோக்கி படையெடுக்க வைப்பதற்காக கடுமையாக உழைத்துவருகிறார்.
ஆனால், ஆர்.கே.நகரில் அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற குக்கர் சின்னமே தற்போதைய தேர்தலுக்கும் வேண்டும் என அமமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும், அவர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்காமல் பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். இதனால் அக்கட்சியினர் சிறிது அப்செட் ஆனாலும் இந்த சின்னத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்போம் என்று சூளுரைத்து கடும் களப்பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதேபோல் அங்கு காமராஜ் என்ற சுயேச்சைக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
மேலும்,பாப்பிரெட்டிப்பட்டியில் அமமுக வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியிலும் அமமுக வேட்பாளர் பெயரான ராஜேந்திரன் என்ற சுயேச்சைக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.