சென்னை:நடிகை மீரா மிதுன் தனது யூ-ட்யூப் பக்கத்தில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது பட்டியலினத்தோர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கடந்த 14ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை மீரா மிதுனை சென்னை எம்கேபி நகர் காவல் துறையினர், மற்றொரு வழக்கில் நேற்று (ஆக.26) கைது செய்தனர்.
2020ஆம் ஆண்டு ஜோ மைக்கேல் என்பவர் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டதற்கான ஆணையுடன் புழல் சிறையிலிருந்து நடிகை மீரா மிதுனை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்துவதற்கு இரண்டு நாள் காவல் கேட்டு எம்கேபி நகர் காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கேட்டும் மீரா மிதுன் மனுதாக்கல் செய்துள்ளார்.
காவல் துறையினரின் மனு தள்ளுபடி
இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி லட்சுமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்கேபி நகர் காவல் துறையினர் தரப்பில், மீரா மிதுனுக்கு பிணை கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்டு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால், இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியும் கோரினர்.