இலங்கை அரசின் இந்த ஆட்சி மாற்றம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குற்றத்தை ஐ.நா மன்றத்தின் மனிதஉரிமை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அந்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தவும் அதிக வாய்ப்புள்ளது. 2009ஆம் ஆண்டு தமிழீழமே தீர்வு என்று தொடர்ந்து போராடி வந்த விடுதலைப் புலிகளை அடியோடு அழிக்க சிங்கள அரசு அதன்மீது போர் தொடுத்தது.
இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ராணுவத்தை வைத்து தமிழ் இனத்தை வேரறுத்த சிங்கள அரசின் பேரினவாதத்தை உலக நாடுகள் கண்டித்தன. தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் வெகுண்டு எழுந்து போராட்டங்கள் நடத்தின. இனப்படுகொலைக்கு காரணமாயிருந்த அதிபர் மஹிந்த ராஜபக்ச தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.
அதன்பிறகு நடந்த தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்று இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தமிழ்நாட்டில் இனப்படுகொலை மற்றும் சிங்கள அரசு குறித்த பேச்சுகள் குறையத் தொடங்கின. இதையடுத்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சில அமைப்புகள் மட்டுமே தமிழீழ இனப்படுகொலை குறித்து அவ்வப்போது குரல் எழுப்பி வந்தன. இவ்வாறு ஓய்ந்திருந்த குரல்கள் தற்போது மீண்டும் ஓலிக்க தொடங்கியுள்ளன. இதற்கு அண்மையில் வெளியான இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளே காரணம்.
இலங்கையில் நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றுள்ளார். இவர் முள்ளிவாய்க்கால் படுகொலையை நிகழ்த்திய மகிந்த ராஜபக்சவின் சகோதரராவார். அதுமட்டுமின்றி இனப்படுகொலையின் போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்து ராணுவத்தை ஏவியதும் இவர்தான். எனவே இவர் தற்போது அதிபராகி இருப்பது தமிழீழ உணர்வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாள் தமிழ் இனத்துக்கு ஒரு துயரமான நாள். தமிழர்கள் அடையாளமே இல்லாமல் செய்வதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்வதற்கு கோத்தபய ராஜபக்ச துடித்துக்கொண்டு இருப்பான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இது குறித்த முதல் கண்டனத்தை பதிவு செய்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோத்தபய ராஜபக்சவின் வெற்றியை, இன்றைய சூழலில் ஜனநாயக ரீதியாக கடந்து போகவும் முடியாது. அவரின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனையும் உரிமைகளையும் பாதுகாத்திட அனைத்து நடவடிக்கைகளையும் தொடக்கத்திலிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.