தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை! என்ன சாதித்தது இந்த விடியா அரசு 8 மாதத்தில்?'

ஒரு நாள் மழைக்கே தலைநகர் சென்னை மீண்டும் மிதக்கிறது. என்ன சாதித்தது இந்த விடியா அரசு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ராஜினாமா செய்வாரா? என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

விடியா அரசு
விடியா அரசு

By

Published : Dec 31, 2021, 6:51 PM IST

Updated : Jan 1, 2022, 9:02 AM IST

சென்னை:இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, அதிமுக அரசு முன் எச்சரிக்கையாக சென்னை மாநகரத்திற்குத் தனியாகவும், மாவட்ட அளவில் ஆட்சியர்களுடனும், காவல் துறை, தீயணைப்பு, மீட்புப் பணித் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, உள்ளாட்சித் துறை,

நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, மின்சார வாரியம் உள்பட அனைத்து முக்கியமான துறைகளைப் பேரிடர் மேலாண்மைத் துறையின்கீழ் ஒருங்கிணைத்தும், அப்போது முதலமைச்சராக மக்கள் பணியாற்றிய எனது தலைமையில், மூத்த அமைச்சர்கள், துறை அமைச்சர்களுடன் ஆகஸ்ட் மாதத்திலேயே குறைந்தது ஐந்து ஆய்வுக் கூட்டங்களையாவது நடத்துவோம்.

சென்னை தத்தளிக்க காரணம் இதுதான்

தொடர்ந்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தங்கள் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவார்கள். இது தவிர, தலைமைச் செயலர் பருவமழை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனும் ஆய்வுசெய்வார்.

இந்த விடியா அரசு, மே மாதமே ஆட்சிப் பொறுப்பை ஏற்றும், வடகிழக்குப் பருவமழை குறித்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குச் சரியான அறிவுரைகள் வழங்கப்படவில்லை என்றும், முக்கியமாகச் சென்னையில் பணிபுரிந்த அலுவலர்களை முழுவதுமாகப் பணியிட மாறுதல் செய்ததன் விளைவாக, ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகளை எனது முந்தைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

நேற்று ஒரு நாள், பிற்பகல் முதல் பெய்த கனமழையால் சென்னையில் மட்டும் மின்சாரம் தாக்கி மூன்று பேர் பலியாகி உள்ளனர். ஓட்டேரியில் வசித்துவந்த தமிழரசி (70) நேற்று மாலை, நியூ பேரன்ட்ஸ் சாலையில் நடந்து சென்றபோது அப்பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்ததும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதைச் செய்திருந்தாலே பாதிப்பை தவிர்த்திருக்கலாம்

அதேபோல், புளியந்தோப்பைச் சேர்ந்த மீனா (40) சாலையில் தேங்கிய மழைநீரில் நடந்து சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும், மயிலாப்பூரைச் சேர்ந்த லட்சுமணன் (13) என்ற எட்டாம் வகுப்பு பள்ளி மாணவன் நேற்று மாலை வீட்டின் அருகே தேங்கிய மழைநீரில் கால் வைத்ததும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் உயிரிழந்த மூவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதியினை வழங்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

வடகிழக்குப் பருவமழை 20 நாள்களுக்கு முன்பு சிறிதளவு ஓய்ந்திருந்தது. அப்போதாவது பழுதடைந்த மின் உபகரணங்கள், சாலைகள், வடிகால்களைச் சீரமைத்திருந்தால் இந்தப் பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

விடியா அரசின் அமைச்சரை ராஜினாமா செய்ய சொல்லுவரா ஸ்டாலின்?

ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருக்கும் யோசனைகளை, இந்த எட்டு மாதங்களில் செயல்படுத்தியிருந்தால்கூட, இந்த மூன்று உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள இடர்ப்பாடுகளையும் தவிர்த்திருக்கலாம். மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் அப்பகுதியில் உள்ள மின் வடங்களிலிருந்து மின் கசிவு ஏற்பட்டதே உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, சம்பந்தப்பட்ட அமைச்சரை பதவி விலகச் சொன்ன இன்றைய முதலமைச்சர், தற்போது இந்த விடியா அரசின் மின்சாரத் துறை அமைச்சரை ராஜினாமா செய்யச் சொல்லுவாரா? மேலும், சென்னையில் நேற்று ஒருநாள் பெய்த கனமழையால் சாலைகளில் ஏற்கனவே எங்கெல்லாம் மழைநீர் தேங்கியதோ, அந்த இடங்களிலேயே நேற்றும் தேங்கியது.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வருவதேயில்லை

சென்னையில் பொதுமக்கள் நேற்று வீடு திரும்ப, பெரும் அவதிக்கு உள்ளானார்கள் என்ற செய்திகள் வெளியாகின. இந்த அரசின் முதலமைச்சர், பாதிக்கப்பட்ட இடங்களை, அலுவலர்கள் அடங்கிய குழுவுடன் பார்வையிடுகிறார். ஊடகங்களுக்குப் போஸ் கொடுக்கிறார்.

அதிமுக அரசின் மீது பழிபோடுகிறார்; அத்தோடு அவரது பொறுப்பு முடிவடைந்துவிடுகிறது. அடுத்த நாள் அவர் பார்வையிட்டு ஆய்வுசெய்த இடங்களை, நேரில் சென்று பார்த்தால் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், பாதிக்கப்பட்ட இடங்களுக்குத் துறை அமைச்சர்கள் யாருமே நேரில் வந்து பார்வையிடவில்லை என்றும், முதலமைச்சர் பார்வையிட்டுச் சென்றவுடன் நிவாரண உதவிகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிடுகிறது என்றும், முக்கியமாக சென்னையில் ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வருவதேயில்லை என்று அனைத்துப் பேட்டி அளித்துள்ளதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கருணாநிதி வழியில் திசைதிருப்பும் இவ்வரசு

நீட்டுக்காக ஒரு குழு; வெள்ளச் சேதங்களால் பாதிப்படையாமல் இருக்க ஆய்வுசெய்து அறிக்கை வழங்க ஒரு குழு; நிதி மேலாண்மைக்கு ஒரு குழு என்று, குழுக்கள் அமைப்பதைப் பார்க்கும்போது, இந்த விடியா அரசு, தனது முன்னாள் தலைவர் எப்படி விசாரணை ஆணையங்களை அமைத்து பிரச்சினைகளைத் திசை திருப்பினாரோ, அதுபோல் இந்த அரசும் குழுக்களை அமைத்து பிரச்சினைகளைத் திசை திருப்புகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இனியாவது, தங்களது இயலாமையால் மக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எதிர்க்கட்சிகளைக் குறை கூறாமல், மக்கள் நலப் பணிகளில் உண்மையான அக்கறையுடன் ஈடுபட வேண்டும் என்று இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மக்கள் கடல்... மாநாட்டு மன்னர்; நீங்களே மீறலாமா மிஸ்டர் CM! - ஓபிஎஸ்

Last Updated : Jan 1, 2022, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details