தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் சரிசெய்ய அனைத்தையும் செய்வோம்! - எடப்பாடி எச்சரிக்கை

அமைதியான கோவையைக் கலவர பூமியாக திமுகவினர் மாற்ற முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் அதனைச் சரிசெய்ய அனைத்தையும் செய்வோம் என திமுகவை எச்சரித்தார்.

எடப்பாடி பழனிசாமி, இபிஎஸ், ஈபிஎஸ், Edappadi Palaniswamy, EPS
எடப்பாடி பழனிசாமி

By

Published : Feb 14, 2022, 9:35 PM IST

கோவை: கொடிசியா மைதானத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய அவர், ”ஊடகங்களை வைத்து திட்டங்களைச் செயல்படுத்தியதுபோல் பிம்பத்தை உருவாக்கிவருகிறார்கள். அதிமுக ஆட்சியில் 190-200 ரூபாய்க்கு வழங்கப்பட்ட அம்மா சிமென்டை, இப்போது 450 ரூபாய்க்கு வலிமை சிமென்ட் என வழங்குகின்றனர்.

அடியோடு சீர்கெட்டுவிட்ட சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது. தன்னை சூப்பர் முதலமைச்சர் என தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் இந்தியாவிலேயே ஒரே முதலமைச்சர் ஸ்டாலின்தான். நாட்டு மக்களுக்கும், கோவை மக்களுக்கும் திமுக முதலமைச்சர் ஸ்டாலின் என்ன திட்டங்களைக் கொண்டுவந்தார்.

கோவையில் வாக்காளர்களுக்கு வழங்க 70 லாரிகளில் 70 லோடு ஹாட்பாக்ஸ்கள் இறக்கப்பட்டுள்ளன. கொள்ளையடித்த பணத்தை எந்த ரூபத்தில் தந்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் வாக்கை இரட்டை இலைக்குச் செலுத்துங்கள்" எனத் தெரிவித்தார்.

கோவையில் பரப்புரை

திமுக போடும் திட்டங்கள் அவர்களது கட்சி, குடும்பத்தினருக்கும் மட்டுமே செல்கிறது எனவும், ஐந்து கட்சிக்குச் சென்றுவந்த அமைச்சர் செந்தில்பாலாஜியை கோவைக்கு நியமித்திருக்கிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். மின்வெட்டு ஏன் ஏற்படுகிறது என்று கேட்டால் அணில் அமைச்சர் அணில் சென்றது என்கிறார் எனக் கிண்டல் செய்தார் இபிஎஸ்.

தரம் தாழ்ந்துபோன காவல் துறை

மின்வெட்டு என்பதும் மின் தடை என்பதும் வேறு வேறு. மின்வெட்டு குறித்து கேட்டால் மின் தடை குறித்துப் பேசுகிறார் எனக் குளறுபடி பதில்களைச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, காவல் துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிட்டதாகக் கவலை தெரிவித்தார்.

கூலிப்படையை வைத்து அதிமுக நிர்வாகிகளை மிரட்டுவதாகச் சொன்ன அவர், அதிமுக நிர்வாகிகளைக் கைதுசெய்து அழைக்கழிப்பதையும் குறிப்பிட்டார். காவல் துறையினர் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டு திமுகவிற்கு ஆதரவாகப் புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

காவல் துறை தரம் தாழ்ந்துபோனால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என வேதனையை வெளிப்படுத்தி அவர், திமுக அரசு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தார். தில்லு, திராணி இருந்தால் நேரடியாக அதிமுகவை எதிர்த்து திமுக வெற்றிபெற வேண்டும் எனச் சவால்விட்ட எடப்பாடி பழனிசாமி, குறுக்கு வழியைக் கையாளக் கூடாது என அறிவுறுத்தினார்.

சட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டால் அனைத்தையும் செய்வோம்

அமைதியான கோவையைக் கலவர பூமியாக திமுகவினர் மாற்ற முயற்சிப்பதாக பகீர் தகவலை வெளியிட்ட அவர், இது தொடர்ந்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம் எனவும் எச்சரித்தார். ஓட ஓட மாவட்டத்தில் இருந்தே விரட்டி அடிப்போம் எனவும் அவர் கூறினார்.

மேலும் எங்களுக்கும் செய்யத் தெரியும் எனக் குறிப்பால் உணர்த்திய எடப்பாடி பழனிசாமி, ஆனால் அதற்காக எங்களை மக்கள் தேர்வுசெய்யவில்லை என்பதையும் குறிப்பிட்டார். சட்டத்திற்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் அதைச் சரி செய்ய அனைத்தையும் செய்வோம் எனக் கடுமையாக எச்சரித்தார்.

ஸ்டாலின் தான் பச்சைப் பொய் சொல்வதாகக் கூறுவதாகக் கூறினார். 'நான் கருணாநிதியின் மகன்' என்கிறார் ஸ்டாலின். யார் இல்லை என்று சொன்னார்கள்? என நக்கலான வினா ஒன்றையும் விடுத்தார் எடப்பாடி பழனிசாமி. மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுப்பேன் என்றவர், கொடுத்தாரா? எனக் கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலினை நம்பி நகைகளை இழந்த மக்கள்

மேலும் அவர், "ஆட்சிக்கு வந்தவுடன் கொடுப்பதாகச் சொன்னவர்கள் மக்கள் கேட்டால் உதயநிதி இன்னும் நான்கு ஆண்டுகள் இருப்பதாகச் சொல்கிறார். 13 லட்சம் பேருக்கு தான் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 35 லட்சம் பேர் வட்டி கட்டிதான் நகையை மீட்க முடியும்.

ஸ்டாலின் பேச்சை நம்பியதால் திமுகவிற்கு ஓட்டு போட்டு நகைகளை இழந்துவிட்டார்கள். அவர்கள் ஒருபோதும் ஸ்டாலினை மறக்க மாட்டார்கள். கல்விக்கடன் ரத்து எனச் சொன்னார்கள் செய்யவில்லை, முதியோர் உதவித்தொகை உயர்த்தவில்லை, பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவில்லை.

மத்திய அரசு குறைத்தபோதும் தமிழ்நாடு அரசு குறைக்கவில்லை. திமுகவின் காந்தி செல்வன் மத்திய இணையமைச்சராக இருந்தபோதுதான் நீட் கொண்டுவரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் திமுகவும், காங்கிரசும் மறுசீராய்வு மனு போட்டதால்தான் நீட் தேர்வு வந்தது. எங்கு வேண்டுமானால் வந்து நீட் குறித்து விவாதிக்கத் தயார்" எனத் தெரிவித்தார்.

யரோ பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைத்துக்கொள்ளும் ஸ்டாலின்

திமுக நேர்வழியில் வந்த சரித்திரமே இல்லை எனவும், திமுகவிற்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு கார்ப்பரேட் கட்சிபோல் நடத்துகின்றனர் எனவும் அவர் சொன்னார். கட்சியினர் நிர்வாகிகளை நம்பாமல், ஏஜென்சியை கொண்டுவந்து கொள்ளையடித்த பணத்தைச் செலவுசெய்து வென்றுள்ளார்கள் என்றார்.

எட்டு அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து திமுகவிற்குச் சென்று அமைச்சராக உள்ளதையும் தவறாது சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, பணம் செலுத்தி முதலீடு செய்தவர் அமைச்சராகிவிட்டதாகவும் கூறினார். கோவை அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.

ஆயிரத்து 581 கோடி ரூபாயில் தாங்கள் அடிக்கல் நாட்டிய அத்திக்கடவு அவிநாசி திட்டத்தைத் தொடங்கிவைக்கிறார் ஸ்டாலின் என்று சொன்ன இபிஎஸ், யாரோ பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைத்துக்கொள்கிறார் எனவும் கிண்டலடித்தார். அதிமுக கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் முடக்கிவருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், மக்களுக்கு நன்மை தரும் திட்டங்களை முடக்குவதுதான் திமுகவின் வேலை எனவும் தெரிவித்தார்.

சிறுபான்மையினருக்கு எப்போதும் அரண் அதிமுகதான்!

எஸ்.பி. வேலுமணி அமைச்சராக இருந்தபோது 500 திட்டங்களுக்கு டெண்டர் வைத்து பணி தொடங்கப்பட்டதாகவும் இபிஎஸ் கூறினார். ஆனால் ஆட்சி மாறியதும் தங்களுக்குப் பேர் கிடைக்குமே என்று ரத்துசெய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் அரணாக இருக்கும் கட்சி அதிமுக என்பதைப் பரப்புரையின்போது எடுத்துசொல்லுமாறு தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - அண்ணாமலை குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details