சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 200 யூனிட்டுகளுக்கு மேல் 2 மாதங்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27 ரூபாய் 50 காசுகளும், 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72 ரூபாய் 50 காசுகளும் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் 2 மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18 லட்சத்து 82 ஆயிரம் மின் நுகர்வோர்களுக்கு, மாதத்திற்கு 147 ரூபாய் 50 காசுகளும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதித் சுமையில் சிக்கியுள்ளதால், கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, இந்த மின்கட்டண உயர்வு குறித்து, மின் நுகர்வோர் தங்களது கருத்துகளை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் இணையத்தில், ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை மின்நுகர்வோர் தங்களது கருத்துகளை கூறலாம் என தெரிவிக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்தடை என்பது எழுதப்படாத விதி போல ஆகிவிடும் என பொதுமக்கள் விமர்சித்து வந்த நிலையில், இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளானது. ஆனால், மத்திய அரசின் அழுத்தம் காரணமாகவே மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். மின் கட்டணத்தை உயர்தவில்லை என்றால், மத்திய அரசிடம் இருந்து வழங்கப்படும் மானியத்தை நிறுத்தி விடுவோம் என நெருக்கடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடன் வழங்கக்கூடாது என ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியதாகவும், இதனால் வேறு வழியில்லாமல் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்கட்டணம் உயர்த்தப்படுவதால், பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மின் வாரியத்திற்கு மொத்தம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி ரூபாய் கடன் உள்ளது. இதற்கான வட்டித்தொகையாக மட்டும் வருடத்திற்கு 16 ஆயிரத்து 511 கோடி ரூபாயை மின்வாரியம் செலுத்தி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி அதிக தொகைக்கு வாங்க வேண்டிய சூழல் இருப்பதால், இன்னும் முப்பதாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலைக்கு மின்சார வாரியம் தள்ளப்பட்டுள்ளது. மின்சார வாரியம் இவ்வளவு கடனில் இருப்பதற்கு காரணம் திமுக என்று அதிமுகவும், அதிமுக என்று திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர்.