சென்னை: நீர்வளத் துறை மீதான மானியக் கோரிக்கைகளுக்கு பதிலுரையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், நான் கோபாலபுரத்து விசுவாசி என்றும் இத்துறையை கேட்டுப் பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். தொடர்ந்து, “அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும்” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
5 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள்: “நீர்வளத்துறை என்பது என் உயிருடன் உடலுடன் கலந்த துறை என்று குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் துரைமுருகன், தடுப்பணைகள் வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோரிக்கை வைப்பதாகவும், அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என்றும், அனைத்து தொகுதிகளிலும் ஒரு தடுப்பணை கட்ட வேண்டுமென்பது தனது ஆசை எனவும் துரைமுருகன் கூறினார். அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு, திமுக ஆட்சியில் வட்டி கட்டும் நிலை இருப்பதாகவும்” தெரிவித்தார்.