சென்னை:எத்தியோப்பியா நாட்டிலிருந்து சென்னைக்கு பெருமளவு போதைப் பொருள்கள் விமானம் மூலமாக கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியா நாட்டின் அடீஸ் அபாபா நகரிலிருந்து நேற்று சென்னை வந்த எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் அனைவரையும் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்.
அதில் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். ஆனால், அவர்களிடமிருந்து எந்த ஒரு போதைப்பொருள்களும் அகப்படவில்லை.
இந்நிலையில், ஆப்பிரிக்காவிலிருந்து சென்னை வந்த இந்தியரான இக்பால் பாஷா (38) என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை நிறுத்தி விசாரித்தனர். அவரிடம் நீங்கள் எதற்காக ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவிற்கு சென்று வருகிறீர்? என கேட்டதற்கு அப்பயணி சரியான பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து , அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்தனர். அப்போது அவர் அணிந்திருந்த உடைகள், உள்ளாடை, ரகசியப்பை அறை மற்றும் காலணிகள் என்று பல்வேறு இடங்களிலிருந்து மொத்தம் 9 கிலோ 590 கிராம் எடையுடைய கொக்கைன் மற்றும் ஹெராயின் போதைப்பொருள்களை கைப்பற்றினர். இவற்றின் சர்வதேச மதிப்பு ரூபாய் 100 கோடி. இது சுங்க அதிகாரிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சென்னை விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.100 கோடி மதிப்புடைய போதைப்பொருள்கள் சென்னை விமான நிலையம் 1932 ஆம் ஆண்டு உருவாகிய பின்பு, இதுவரை இந்த அளவு ஒரே பயணியிடம் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்தது இதுவே முதல் முறை. இதையெடுத்து, அந்தப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
ரூ.100 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் இந்த ரூ.100 கோடி மதிப்புடைய போதை பொருளை இந்தியாவுக்கு கொண்டு வந்து, எங்கெங்கெல்லாம் கடத்த இருந்தாா். இவர் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவில் சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல்