சென்னை விமான நிலைய சரக்குப் பிரிவிற்கு வெளிநாடுகளிலிருந்து வந்த கூரியா் பாா்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் உதய் பாஸ்கர் உத்தரவின்பேரில், அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து மூன்று பார்சல்கள் வந்திருந்தன. பார்சல்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்கத் துறை அலுவலர்கள் பிரித்துப் பார்த்தபோது, நெதர்லாந்திலிருந்து சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் 21 கிராம் எடை கொண்ட 53 நீல நிற போதை மாத்திரைகள் இருந்தன.
சுங்கத் துறை அலுவலர்கள் நடவடிக்கை
அமெரிக்காவிலிருந்து சென்னை, விஜயவாடாவிலுள்ள முகவரிக்கு வந்த இரு பார்சல்களில் சுமார் 815 கிராம் எடையுள்ள உயர் ரக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று பார்சல்களிலிருந்து வந்த இரண்டு லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவற்றை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
இது தொடர்பாக சென்னை, விஜயவாடாவில் உள்ள முகவரியில் விசாரித்தபோது போலியானது எனத் தெரியவந்தது. இது தொடர்பாக சுங்கத் துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து எதற்காக போதை மாத்திரைகள், கஞ்சா ஆகியவை கடத்தப்பட்டுவந்தன. இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: வெள்ளிப் பொருள்களுக்கு இரட்டை ஜிஎஸ்டி: திரும்பப்பெற கோரிக்கை