சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் வி.சாந்தா உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்; அவருக்கு வயது 93.
இதயநோய் காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவர் சாந்தா, மூச்சுத்திணறலால் காலமானார். அவரது உடல் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள சாந்தாவின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், நடிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில்,
நடிகர் விவேக்:
"புற்றுநோய் சிகிச்சைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் மருத்துவர் சாந்தா. சுமார் 65 ஆண்டு காலம் புற்றுநோய் சிகிச்சைக்காக தன்னையே அர்ப்பணித்து பொதுநல சேவை செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. மறைந்த மருத்துவர் சாந்தாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். சிலருக்கு விருதால் பெருமை; மருத்துவர் சாந்தாவால் அவர் பெற்ற விருதுக்குப் பெருமை என புகழாரம் சூட்டினார்.
சுகாதாரத் துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவரும் புகழ் பெற்ற மருத்துவருமான செல்வி சாந்தா அவர்களின் மறைவு மருத்துவ துறைக்கு பெரும் இழப்பு. தமிழ்நாட்டை சேர்ந்த தலை சிறந்த புற்றுநோய் மருத்துவர் சாந்தா. அவரது உயிரிழப்பு அதிர்ச்சியை அளிக்கிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அடையார்று புற்றுநோய் மருத்துவமனைக்கு மாநில அந்தஸ்து வழங்கினார். வயதான காலத்திலும் புற்றுநோய் சிகிச்சை வழங்கினார். மற்ற மருத்துவர்களுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர்.
நடிகர் சித்தார்த்
உலகத்திற்கு மிகப்பெரிய இழப்பு; உலகத்திற்கு கடவுள் வந்தால் எப்படி இருக்குமோ அதை கண் முன் கொண்டு வந்து காட்டியவர் மருத்துவர் சாந்தா. ஓயாமல், உதவியும் சிகிச்சையும் தேவைப்பட்ட அனைவருக்கும் அவர் சிகிச்சை அளித்துள்ளார். மருத்துவர் சாந்தா நமக்கு கடவுள்தான். நம்முடன் இருந்த மிகப்பெரிய ஆன்மா சாந்தா அவர்களின் வாழ்வு அடுத்த 1000 ஆண்டுகள்வரை பிரதிபலிக்கும். அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்தார்.
வையாபுரி ( வைகோ மகன் ): வாழும் அன்னை தெரசாவாக வாழ்ந்தவர் மருத்துவர் சாந்தா. அவர்களுடனான சந்திப்பை வாழ்நாளின் பெரிய பாக்கியமாக கருதுகிறேன். மருத்துவர் சாந்தா அவர்களின் மறைவு அதிர்ச்சியாக உள்ளது. இங்கு பணியாற்றும் மருத்துவர்கள் வழியாக அவர் வாழ்ந்து வருகிறார். சேவையின் மூலம் சாந்தா அவர்கள் வாழ்ந்து வருவார். அவர் விட்டு சென்ற சேவையை இங்குள்ளவர்கள் தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.
வானதி ஸ்ரீநிவாசன், (பாஜக தேசிய மகளிர் அணித்தலைவர்)
மருத்துவர் சாந்தா அவர்களின் மறைவு மருத்துவ உலகிற்கும் பேரிழப்பாகும். புற்றுநோயாளிகளுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர். தியாக வாழ்வு வாழ்ந்து சென்றிருக்கிறார். அவரின் அர்ப்பணிப்பும் தியாக உணர்வும் என்றும் போற்றப்படும்.
கே.பாலகிருஷ்ணன், (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்) புற்றுநோய் மருத்துவத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த மருத்துவர் சாந்தா அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்லாயிரகணக்கான புற்று நோயாளிகளை குணப்படுத்தியவர். பெண்ணாக இருந்தாலும் மருத்துவ துறையில் சாதித்து காட்டிய பெருமை சாந்தாவுக்கு உரியது. அவரோடு பணியாற்றிய மருத்துவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
கராத்தே தியாகராஜன்
மருத்துவர் சாந்தா அவர்களின் மறைவால் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த பகுதி மக்களின் அன்பை பெற்றவர். உலக அளவில் மருத்துவர் சாந்தா அன்பை பெற்றவர். அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்
ஆர்.எஸ் பாரதி:
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மருத்துவர் சாந்தா எந்தெந்த கோரிக்கைகளை முன்வைத்தாரோ அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றி தந்தவர். மறைந்த மருத்துவர் சாந்தா அவர்களின் ஆலோசனை பெயரிலேயே காஞ்சியில் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்களை, செவிலியர்களை தனது சொந்த குழந்தைகளைபோல் நடத்தக்கூடியவர். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியூரில் இருப்பதால் நேரில் அஞ்சலி செலுத்த முடியவில்லை. திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்
த.வெள்ளையன், (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர்) மருத்துவர் சாந்தா புற்றுநோயை அகற்ற வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். உண்மையிலேயே எனக்கு மிகவும் நெருக்கமான பலர், மருத்துவர் சாந்தா அவர்களின் ஆலோசனையை கேட்ட நேரத்தில் தீராத புற்று நோய் தீர்ந்துள்ளது. அர்ப்பணிப்பு தன்மையோடு கூடிய மக்கள் நலனை அவர் பின்பற்றியிருக்கிறார். அவரை இழந்திருப்பது மிகப்பெரிய இழப்பு. 93 வயதுவரை மருத்துவர் சாந்தா நமக்கெல்லாம் பயன்பட்டார் என்ற அளவில் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்றார்.
திமுக சார்பில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் மா.சுப்ரமணியம், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் மருத்துவர் சாந்தா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்