இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 13 ஆயிரத்து 610 ரூபாய், பி.டி.எஸ். படிப்புக்கு 11 ஆயிரத்து 610 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது.
ஆனால் ராஜா முத்தையா கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஐந்து லட்சத்து 54 ஆயிரம் ரூபாயும், பி. டி.எஸ். படிப்புக்கு மூன்று 50 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.
இதனை எதிர்த்து மாணவர்களும், பெற்றோர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதிக கட்டணம் வசூலித்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கூடுதலாக பெற்ற கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
ஆனால் மாணவர்களுக்கு இன்றுவரை அவர்கள் செலுத்திய கூடுதல் கட்டணங்கள் எதுவும் திரும்ப செலுத்தப்படவில்லை.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர். ஜீ. ஆர். இரவீந்திரநாத் அரசு மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு கீழ் செயல்படும்போது ராஜா முத்தையா கல்லூரி- அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு கீழ் செயல்படுவதற்கு காரணம் என்ன? இதன்மூலம் திட்டமிட்டு கல்விக் கொள்ளை நடைபெறுவது அம்பலமாகிறது.
எனவே, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு கீழ் கொண்டுவந்து அரசுக் கல்லூரிக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும், அவ்வாறு கொண்டுவரப்படவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக போராட்டங்கள் நடத்தப்படும்’ என எச்சரிக்கைவிடுத்தார்.