கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு, கிண்டி ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு வகை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மினி பேருந்து வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறும்போது விரைந்து குணமடைய முடியும்.
மாநிலத்தில் இதுவரை 2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கரோனா சிகிச்சை மையங்களாக இல்லாத மருத்துவமனைகளில் ஏற்படும் இறப்புகளை தெரிவிக்க சிறிது கால தாமதம் ஆகிறது. இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, தொற்று பாதித்தவர்களுக்கு ஏற்கனவே உள்ள நோய்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகமாக இருக்கிறது. இறப்பு எண்ணிக்கை கண்டு அச்சம்கொள்ள தேவையில்லை“ என்று கூறினார்.