மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ள, மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆராய குழு அமைத்திருப்பது அவசியமற்றது என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தேசிய கல்விக்கொள்கை வரைவு 2019-ஐ சென்ற ஆண்டு மத்திய அரசு வெளியிட்டது. அதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. கல்வியாளர்கள் அந்த வரைவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் அந்த வரைவுக் கொள்கையின் சாரம் மாறாமல், அப்படியே அது `தேசிய கல்விக் கொள்கை 2020’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு உலக வங்கி ஒப்புதல் கொடுத்துள்ளது. அதன் பிறகு, அக்கொள்கையை நடைமுறைப்படுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் நவீன அறிவியல் மருத்துவத்தில், போலி மருத்துவ அறிவியலை அறிவியல் ரீதியாக காலாவதியான மருத்துவ முறைகளையும் திணிப்பதற்கு முயலுகிறது.
இந்தக் கல்விக் கொள்கை, மருத்துவக் கல்வியை மேலும் தனியார்மயமாக்குகிறது. கார்ப்பரேட் மயமாக்குகிறது. சமூகநீதிக்கு எதிராக உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கும் எதிராக உள்ளது.
எனவே, இந்த தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இக்கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழ்நாடு அரசு குழு அமைத்திருப்பது அவசியமற்றது. இது ஒரு கண்துடைப்பு நாடகம் போல் உள்ளது.
தமிழ்நாடு அரசு இக்கல்விக் கொள்கையை ஏற்கக் கூடாது. இந்தக் கல்விக் கொள்கையை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.