கரோனா தொற்றின் முதல் அலையைவிட இரண்டாவது அலையில், இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள் ஆக்ஸிஜன் போன்ற சிகிச்சை முறைகளை அளித்தாலும், தீவிர நோயினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது என்பது முடியாத நிலையில் தான் இருக்கிறது. முதல் அலையின் போது கடந்த ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி கரோனா தொற்றினால் 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 474 ஆகவும், முதல் அலையில் ஒரு ஆண்டில் 8 லட்சத்து 52 ஆயிரத்து 16 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டும் இருந்தனர். நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைப் பலனின்றி இறப்பவர்களின் எண்ணிக்கை ஐந்து என்ற நிலையில் இருந்தது. தமிழ்நாட்டில் முதல் அலையில் 12,501 நபர்கள் மட்டுமே இறந்திருந்தனர். தமிழ்நாடு முழுவதும் 4009 பேர் மட்டுமே சிகிச்சைப் பெற்று வந்தனர்.
ஆனால், அதன் பின்னர் தொடங்கிய இரண்டாவது அலையில் கரோனா தொற்று தாக்கத்தின் வேகம் அதிகமாக இருக்கிறது. மேலும் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவைகள் தொடர்ந்து நிரம்பி வழிகிறது. மே மாதம் 23ஆம் தேதி நிலவரப்படி, கரோனா தொற்று பாதிப்பு புதியதாக 35,483 நபர்களுக்கு கண்டறியப்படுகிறது. அவர்களில் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 94 ஆயிரத்து 143 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிகிச்சைப் பெற்று வருபவர்களில் சிகிச்சைப் பலனின்றி 422 பேர் இறந்துள்ளனர். இதுவரை 20 ஆயிரத்து 468 பேர் இறந்துள்ளனர். இரண்டாவது அலையில் 7,967 சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தநிலையில் சிகிச்சை தொடங்க வேண்டும் என்பது குறித்தும், இறப்பினை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சென்னை பன்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனையின் ஒருங்கிணைப்பு அலுவலர் அனந்த குமார் கூறும் தகவல்களைக் காணலாம்.
கரோனா தொற்று இரண்டாவது அலையில் உருமாறிய நிலைக் காரணமாக, நுரையீரல் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அதிகளவில் இறப்பதைப் பார்க்கிறோம். நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசும் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகரித்து வருவதுடன், பரிசோதனைகளையும் அதிகரித்து வருகிறது. கரோனா இறப்பைத் தவிர்ப்பதற்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்துகொள்வதில் தயக்கம் காண்பிக்கின்றனர். குறிப்பாக அவர்கள் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனைக்கு வருவதில்லை. இந்த நேரத்தில் நோயின் தாக்கம் தீவிரமடைவதைப் பார்கிறோம்.
அடுத்தகட்டமாக பரிசோதனை செய்தபின்னர் வீட்டில் இருந்தும் சிகிச்சைப் பெறுகின்றனர். மேலும் இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் தகுதி இருந்தும் தடுப்பூசி போடாமல் இருப்பதாலும், குறிப்பாக கிராமப்புறங்களில் வயதானவர்கள் தடுப்பூசியைப் போடாமல் இருப்பதாலும் நோய்த்தொற்று ஏற்படும்போது அதிக நோய்த்தொற்றுக்கு உள்ளாகி அவர்களும் இறப்பதைப் பார்க்கிறோம்.
18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசிக்கு தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா தொற்று அறிகுறிகளான ஜூரம், தொண்டை வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அரசு அனைத்து இடங்களிலும் இலவசமாகவே இப்பரிசோதனையை வழங்கி வருகிறது. கோவிட் தொற்று என்பது வெளியில் சொல்லக்கூடாத நோய் அல்ல. கரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்தால், அவர்களுக்கு நோயின் தாக்கம் குறைந்து, இறப்பையும் தடுக்க முடியும். எனவே, மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆரம்பநிலையில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொண்டு, நன்றாக உள்ளவர்கள் வீட்டுத்தனிமையில் இருந்தாலும், அவர்களும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். சாதாரண ஜூரம், தொண்டை வலி, லேசான அறிகுறி உள்ளவர்களுக்குச் சாதாரண மருந்து மாத்திரைகளை அளிக்கலாம்.
வீட்டில் இருந்தாலும் சிலருக்குக் கரோனா தாெற்றுக்கான அறிகுறிகளுடன் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும். அவர்களுக்கு மேலும் சிடி ஸ்கேன் , ரத்தப் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவது என்பது பல்ஸ் ஆக்சி மீட்டரில் நுரையீரலில் 70 சதவீதம் பாதிப்பு ஏற்படும் போது தான் தெரியவரும். இது போன்ற தொற்று ஏற்படுவதை ரத்தப்பரிசோதனை மூலமாகவே தெரிந்துகொள்ளலாம். அவர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரையின்படி சிகிச்சை அளித்தால், எட்டு நாட்களுக்குப் பின்னர் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதையும், ஆக்ஸிஜன் படுக்கை தேவைப்படும் என்ற நிலையையும் தவிர்க்க முடியும். வீட்டில் சிறப்பான சிகிச்சை வழங்கினால் அதற்கு அடுத்த நிலையான ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலைக்கு அதிகளவில் செல்லாமல், சிலர் மட்டுமே செல்லும் நிலையை உருவாக்க முடியும்.
சென்னை பெருநகர மாநாகராட்சி இதற்காகப் பணியாளர்களை நியமனம் செய்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். மாவட்டங்களிலும் ஆலோசனை வழங்கி வருகின்றனர். எனவே, பொது மக்கள் அரசு மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்றும், அரசின் கரோனா ஆலோசனை மற்றும் தடுப்பு எண்ணில் தொடர்பு கொண்டும் சிகிச்சைப் பெறலாம். மேலும் 104 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு சிகிச்சை மேற்கொள்ளலாம். கரோனா சிகிச்சையை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் தாமாக முன்வர வேண்டும்.