திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்டோர், தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன், பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, கோவையைச் சேர்ந்த சேகர், ஜெகநாதன் ஆகியோர் அளித்த புகார்களின் அடிப்படையில், கோவை வெரைட்டி ஹால், துடியலூர் ஆகிய காவல் நிலையங்களில் இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், கோவையில் இரு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் எனவும், மே 29 ஆம் தேதி வரை எந்த கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது எனவும் காவல்துறைக்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இவ்வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், புலன் விசாரணை நடந்து வரும் நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடனே தயாநிதி மாறன் பேசியிருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சொல்லை பயன்படுத்தினாலே வன்கொடுமை தடுப்பு சட்டப்படி குற்றம் என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.