கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு அரசிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, தடுப்பு நடவடிக்கைகளை அரசு சிறப்பாக செய்து வருவதால் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை என்று கூறினார். மேலும் கரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்யக்கூடாது என்றும் சாடியிருந்தார். இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக ஏற்பாடு செய்திருந்த நிலையில், காவல்துறையின் அனுமதி மறுப்பால் அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அதில், "பொதுமக்களுக்கான 'நிவாரணத் தேரை' அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டும் என்ற அடிப்படை ஒற்றுமை எண்ணமே இல்லாத, இரக்கமற்ற மனப்பான்மைக் கொண்ட முதலமைச்சரை தமிழ்நாடு பெற்றிருப்பது ஒரு கெட்ட வாய்ப்பாகும்.
திமுக நடத்தவிருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு காவல்துறை மூலம் மறுப்பு தெரிவிக்க வைத்து, அப்பட்டமான, அசிங்கமான, அநாகரிகமான அரசியலை செய்திருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. காவல்துறை நோட்டீஸ் கிடைக்கப்பெற்றவுடன் திமுக தரப்பில் விளக்கமளித்தும் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இந்த ஆணவத்திற்கும், அதிகார மீறலுக்கும், பக்குவம் பெறாத அரசியலுக்கும் தக்க தருணத்தில் நிச்சயம் பதிலடி கிடைக்கும்.
இருப்பினும், அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் நோக்கில், நாளை காணொலிக் காட்சி மூலம், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். 'பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்' என்பது இதுதானோ என்று கருதும் அளவிற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளம்பர மோகத்திலும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி? - ஓபிஎஸ் உடன் கிரெடாய் நிர்வாகிகள் ஆலோசனை!