வாக்கு எண்ணிக்கைக்கு தயாராகும் திமுக; ஆலோசனை நடத்தும் தலைமை; பின்னணி என்ன? - தமிழ்நாடு சட்டப்பேரவை
திமுக தலைவர் ஸ்டாலின் உடன் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், வழங்கறிஞர் வில்சன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்று ஆலோசனை நடத்தினர். ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறித்தும் கேட்டறிந்தார்.
தமிழ்நாடு சட்டபேரவை தேர்தல் ஓய்ந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து தீவிர ஆலோசனை நடத்தினார். வேட்பாளர்களை தனி தனியாக சந்தித்து வாக்கு சதவீதம் குறித்தும் கேட்டறிந்தார்.
தேர்தல் நடந்த ஏப்ரல் 6ஆம் தேதி அன்றே திமுக தலைவர் ஸ்டாலின் ஐபேக் அலுவலகம் சென்று, தொகுதி நிலவரம், பூத் வாரியாக பதிவான வாக்குகள் குறித்து கேட்டறிந்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் உடன் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன், வழங்கறிஞர் வில்சன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சென்று ஆலோசனை நடத்தினர். ஒரு சில தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது குறித்தும் கேட்டறிந்தார்.
வேட்பாளர்கள் உடன் ஆலோசனை:
திமுக தலைவர் ஸ்டாலினை அவரது இல்லமான ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள இல்லத்தில் தனி தனியாக சந்தித்து திமுக வேட்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர். திமுகவின் முக்கிய தலைமைகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆலோசனையில் யாரும் பங்கேற்கவில்லை. இதில் அமைச்சராக வாய்ப்புள்ளவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினார். பூத் வாரியாக ஓட்டு விழுக்காடு குறைந்த நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட செயலாளர் மூலம் சேகரிக்க உத்தரவிட்டுள்ளார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத தொகுதிகளில் நிர்வாகிகள் மாற்றம் நிகழலாம் என தெரிகிறது.
குறிப்பாக கரூர் வேட்பாளர் செந்தில் பாலாஜி உடன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார், இதில் அதிமுக ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகள் பற்றி எடுத்து கூறியுள்ளனர். தேர்தல் முடிவு வரும் வரை அமைதியாக இருங்கள் பின்னால் பார்த்து கொள்ளலாம் என கூறி அனுப்பி உள்ளார், தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ள தொகுதிகளில் கரூரும் ஒன்று, அதே போல் தொண்டாமுத்தூர் தொகுதியில் கார்த்திகேய சிவசேனாதிபதிக்கு எதிராக தொகுதியில் உள்ள ஒரு சில நிர்வாகிகள் உள்ளடி வேலை பார்த்ததாகவும், வெளிமாவட்டங்களில் இருந்து ஆட்களை கொண்டு வந்து தேர்தல் வேலை பார்த்ததாக திமுக தலைமையிடம் புகார் சென்றுள்ளது.
பூத் வாரியாக பண விநியோகம் முறையாக சென்றதா எனவும், பண முறைகேட்டில் ஈடுபட்ட நிர்வாகிகள் மீது தலைமைக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றுள்ளது. தேர்தல் முடிவு வரை அமைதி காக்குமாறும், இது குறித்து பொதுவெளியில் எதுவும் பேச வேண்டாம் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஐபேக்கும்- திமுகவும்:
சட்டபேரவை தேர்தலுக்கு திமுக உடன் போட்ட ஒப்பந்தம் தேர்தல் உடன் முடிவுக்கு வந்தாலும், ஐபேக் நீண்டகாலம் பயணிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்பார்த்த வெற்றிக்கு மேல் கிடைக்கும் பட்சத்தில் மறைமுக ஆலோசகராகவும், அரசின் திட்டங்கள் வகுப்பாளராகவும் பிரசாந்த் கிஷோர் செயல்படுவார் என தகவல் கிடைத்துள்ளது. பஞ்சாப் அரசில் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு வருவது குறிப்பிடதக்கது. மேலும். சில மாநிலங்களில் தேர்தல் பணியாற்றி வரும் அவர், ராஜ்யசபா எம்பி ஆகும் கனவிலும் இருக்கிறார். இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார். திமுக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் முக்கிய பதவியை பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
சபரீசன் தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் உடன் தொடர்பில் இருக்கிறார். திமுக தலைமையின் தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படுகிறது. இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் கை கொடுக்கும் என மலை போல் நம்பி கொண்டு உள்ளனர். ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இது போன்று பல்வேறு புதுமையான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. திமுக தலைமை அமைச்சரவை பட்டியலை தயார் செய்யும் பணியில் ஐபேக் மறைமுகமாக ஈடுபட்டு உள்ளது.
கடந்த முறை திமுக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் அதிருப்தி காரணமாக பாஜக பக்கம் சென்றார். அதே போன்று இந்த முறை நிகழா வண்ணம் கட்சிக்கு நீண்டகாலம் உழைத்த விசுவாசிகள் மற்றும் தொண்டர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர்களிடம் தலைவர் தொடர்ந்து தொடர்பில் இருப்பது வேட்பாளர்களுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது, அதே நேரம் பாஜக தனது யுக்தியை கையில் எடுக்கும் என்பதால், உன்னிப்பாக அரசியல் நகர்வுகளை ஸ்டாலின் கவனித்து வருகிறார். தேர்தல் முடிவுகளுக்கு பின்பே திமுக தலைமையின் அதிரடிகள் தொடரும் என்கின்றனர் உடன்பிறப்புகள்.
இந்த சந்திப்பு குறித்து பேசிய காஞ்சிபுரம் திமுக எம்எல்ஏ, தேர்தலுக்கு பின் நடைபெறும் வழக்கமான சந்திப்பு, மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம், தொகுதியில் எங்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக தலைவர் அவர்களையும், இளைஞரணி செயலாளரையும் சந்தித்து நன்றி தெரிவித்தோம் என முடித்துக் கொண்டார்.
மேலும் இது குறித்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிரியன், நிச்சயமாக வெற்றி வாய்ப்பு குறித்துதான் ஆலோசிக்கப்பட்டது, உள்ளடி வேலை பார்த்த நிர்வாகிகள் குறித்து கேட்டறிந்து இருக்கலாம், திமுகவிற்கு கருத்து கணிப்புகள் சாதகமாக இருப்பதால் அமைச்சரவை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, வாக்கு சதவீதம் குறைந்த தொகுதிகள் ஏன் குறைந்தது என கேட்டறிந்து இருக்கலாம் என தெரிவித்தார்.