திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தின் நிறைவாக ஊடக கருத்து சுதந்திரம் முறையாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை-2020ஐ திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 10 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் : 1
கரோனா மரணங்கள் உள்ளிட்ட முக்கியத் தரவுகளை மறைத்த அதிமுக அரசுக்கு கண்டனம். மாவட்டங்களிலும், கிராமங்களிலும் நோய் பரவலை கட்டுப்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும்.
தீர்மானம் : 2
வற்றிவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் நிதியுதவி செய்ய வேண்டும். தவறாகக் கணக்கிடப்பட்ட மின் கட்டணத்தில் 50 விழுக்காட்டை ரத்து செய்து மீதித்தொகையினை, எளிய தவணைகளில் செலுத்துவதற்கான வாய்ப்பினை உருவாக்க வேண்டும்.
தீர்மானம் : 3
கரோனா பாதிக்கப்பட்டு உயிர்த் தியாகம் செய்த “கரோனா முன்கள வீரர்களுக்கான” நிதியுதவி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
தீர்மானம் : 4
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று ஏழு மாதங்களுக்கு மேலாகியும், ஊராட்சி மன்றத் தலைவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் விதத்தில் நிதி ஒதுக்காமல், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக ஜனநாயக விரோதச் செயலில் ஈடுபட்டு வரும் அதிமுக அரசுக்கு கண்டனம்.
தீர்மானம் : 5
ஊடகவியலாளர்கள் ஆணோ/பெண்ணோ தங்களின் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து புகாரளித்தால், அப்புகாரை அலட்சியப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையே தன் பொறுப்பை நிறைவேற்றத் தவறி விலகிச் செல்கிறது என்று அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறது. இந்தப் போக்கை காவல்துறை கைவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
’ஊடக சுதந்திரம் காக்கப்பட வேண்டும்’ - திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் தீர்மானம் : 6
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு மருத்துவக் கல்வி இடங்களில் 50% இடங்களையும், பட்டியலின மக்களுக்கு 18% இடங்களையும் வழங்கிட வேண்டும் என்றும், க்ரீமிலேயர் படி வருமானத்தில் "நிகர சம்பளத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மத்திய அரசாணைகளின்படி அறிவித்துள்ள இடஒதுக்கீடு சதவீதங்களை முழுமையாகச் செயல்படுத்திட தனியாக கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிட வேண்டும் என்றும் மத்திய அரசை இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 7
நீட் தேர்வை ரத்து செய்து, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
தீர்மானம் : 8
கரோனா பேரிடர் கால நெருக்கடியைப் பயன்படுத்தி விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய மின்சார திருத்தச்சட்ட மசோதா 2020; அத்தியாவசிய திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாதம் வழங்கும் வேளாண் சேவைகள் திருத்தச் சட்டம் ஆகிய அவசரச் சட்டங்களை நாடாளுமன்ற அமர்வில் இல்லாத நேரத்தில் நிறைவேற்றிய மத்திய அரசை இந்தக் கூட்டம் கண்டிப்பதோடு இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 9
அச்சு - காட்சி ஊடகங்கள் மீது அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஜனநாயகத்தை நெரிக்க நினைப்பது, மீள முடியாத கொடுந்தீமையில் வீழ்த்திவிடும். ஆகவே கருத்துச் சுதந்திரத்தை முறையாகப் பேணிப் பாதுகாத்திட வேண்டும்.
தீர்மானம் : 10
இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கமிட்டி அமைத்து முடிவெடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவினை ஏற்று உரிய முடிவெடுத்து இந்தக் கல்வி ஆண்டிலேயே தமிழ்நாடு மத்தியத் தொகுப்பிற்கு ஒதுக்கும் இடங்களில் தமிழக அரசு சட்டப்படி பின்பற்றி வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 50% இடஒதுக்கீட்டையும், பட்டியலின மக்களுக்கு 19% இடஒதுக்கீட்டையும், பழங்குடியின மக்களுக்கு 1% இடஒதுக்கீட்டையும் வழங்கிட வேண்டும்.
இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்: விரைந்து சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!