காவிரி மேலாண்மை ஆணையம் நீர் ஆற்றல் அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரப்பட்டதற்குப் பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக விளக்கம் அளித்து நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில்,
”காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டுவதற்கு பதில், தனது பதவியும், அரசும் நிலைத்தால் போதும் என்று, காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க முதலமைச்சர் மத்திய பாஜக அரசுக்கு சாமரம் வீச வேண்டாம்.
காவிரி மேலாண்மை ஆணையம், நீர் ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது, ஒரு நிர்வாக நடைமுறை என்றும், விவசாயிகளுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும்போது, நெஞ்சில் ஆயிரம் யானைகள் மிதிப்பதைப் போன்று ஒரு அழுத்தம் ஏற்படுகிறது.