எழும்பூர் தொகுதியில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசிய அவர், “கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பணப்பட்டுவாடா செய்து ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றது. யாரோ ஊற்றிக் கொடுத்த சாராய போதையில் அமைந்த ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி. அதை நான் கூறவில்லை, அவர்களேதான் கூறுகின்றனர்.
ஜெயலலிதாவிற்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. ஒன்று சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர். மற்றொன்று மோடியா? லேடியா? என்று கேட்டவர். ஜெயலலிதா இருந்தவரை இங்கு நீட் தேர்வையோ, உதய் மின் திட்டத்தையோ கொண்டுவர முடியவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியும், வேலுமணி போன்ற அமைச்சர்களும், ஜெயலலிதாவின் இரண்டாவது அடையாளத்தை அடமானம் வைத்துவிட்டு, முதல் அடையாளமான ஊழலை செய்து வருகின்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆ.ராசா, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரிய போது கடனை ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றத்தில் சொன்ன அதிமுக அரசு, கடன் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் கூறியதும் உடனே ரத்து செய்கிறது. அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என ஸ்டாலின் சொன்னதும், முதலமைச்சர் 7.5% இட ஒதுக்கீடு வழங்கினார். இவை அனைத்தும் அவரது சொந்த புத்தி அல்ல, எங்கள் தலைவர் தந்த புத்தி. வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாத ஒருவர்தான் முதலமைச்சராக உள்ளார்.