தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாஜக தலைவரை சந்தித்த வி.பி.துரைசாமி பதவி பறிப்பு - ஸ்டாலின் நடவடிக்கை

சென்னை: திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

duraisami
duraisami

By

Published : May 21, 2020, 8:16 PM IST

இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த வி.பி. துரைசாமி விடுவிக்கப்படுவதாகவும், அப்பொறுப்பிற்கு மாநிலங்களவை உறுப்பினர், அந்தியூர் செல்வராஜ் புதிதாக நியமிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வி.பி.துரைசாமி திமுகவில் துணைப் பொதுச்செயலாளராக கலைஞர் கருணாநிதி காலத்திலிருந்தே பொறுப்பில் இருப்பவர். சட்டப்பேரவை துணைத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் என பலப் பதவிகளிலும் அவர் இருந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனை துரைசாமி சந்தித்து பேசியது, திமுகவில் புகைச்சலை உண்டாக்கியது. அவர், பாஜகவிற்கு தாவப்போவதாகவும் செய்திகள் உலா வந்தன. இதையடுத்தே துரைசாமியின் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

நடந்து முடிந்த மாநிலங்களவைக்கான தேர்தலில் துரைசாமி தனக்கு சீட் எதிர்பார்த்ததாகவும், ஆனால், முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டதால் அதிருப்தியில் அவர் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாயின. மேலும், பாஜக மாநிலத் தலைவரை சந்தித்தபின், நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த வி.பி.துரைசாமி, ”பிராமணர் கட்சியில் அருந்ததியருக்கு தலைவர் பதவி கொடுத்திருக்கிறார்கள். அதனால் அவரை வாழ்த்தப்போனதில் என்ன தவறு இருக்கிறது.

பாஜக மாநில தலைவர் எல்.முருகனுடன் வி.பி.துரைசாமி சந்திப்பு

அவர்கள் ஏதோ என் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகள் வருகின்றன. பொறுத்திறுந்து பார்ப்போம். கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் என்கிற முறையில் இதுவரை என்னிடம் கட்சி சார்பான எந்த நல்லது, கெட்டதுகளுக்கும் கருத்து கேட்டதேயில்லை. இதே, துரைமுருகனையோ, நேருவையோ கேட்காமல் இருப்பார்களா?“ என்று தெரிவித்திருந்தார்.

மேலும், தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் நல்லவர்தான் என்றும், கூட இருப்பவர்கள் பேச்சைக் கேட்டு அவர் கெட்டுப்போவதாகவும் கூறியிருந்தார். இதுதான் திமுக தலைமையை கோபத்திற்கு உள்ளாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வி.பி.துரைசாமி, பதவி பறிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றும், யாரோ சொல்வதைக் கேட்டு திமுக தலைமை இவ்வாறு முடிவெடுத்துள்ளாதாகத் தெரிவித்துள்ளார். திமுகவில் தொடர்ந்து நீடிப்பதாக தெரிவித்துள்ள அவர், அடுத்த மூன்று நாட்களில் முடிவை அறிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

பாஜக தலைவரை சந்தித்த வி.பி.துரைசாமி பதவி பறிப்பு - ஸ்டாலின் நடவடிக்கை

திமுகவின் முன்னணி தலைவர் ஒருவர் தலைமை குறித்து விமர்சித்துள்ளதும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் தவிக்கும் தமிழர்களை விரைவாக மீட்க வேண்டும் - டி.ஆர்.பாலு கடிதம்

ABOUT THE AUTHOR

...view details