கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 50 நாள்கள் கடந்துள்ள நிலையில், கரோனாவின் வீரியம் குறையாத காரணத்தால் நான்காவது முறையாக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஊரடங்கால் மக்கள் படும் இன்னல்கள் குறித்தும், அரசுகளின் நடவடிக்கைகள் குறித்தும், அதனடிப்படையில் திமுக ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இக்கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் அடிப்படையில் பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டும், அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டும் வருகின்றன. இதனிடையே, அக்கோரிக்கை மனுக்களை அரசிடம் கொடுக்கச் சென்றபோது நடந்தவை குறித்து, திமுகவிற்கும், தலைமைச் செயலாளருக்கும் அறிக்கை போர் வேறு நடந்து வருகிறது. இதுகுறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.