ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வைகோ பேசியபோது காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "வைகோ அரசியல் நாகரிகமற்றவர் எனவும், அவர் காங்கிரஸ் தயவால்தான் ராஜ்யசபா எம்.பி. ஆனார்” என விமர்சித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ’நான் காங்கிரஸ் தயவால்தான் ராஜ்யசபா சென்றதாக அழகிரி கூறியிருக்கிறார். அது தவறு, என் மீதுள்ள கோபத்தில் அப்படி சொல்லியிருக்கிறார். ஒரு ராஜ்யசபா உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்கள் போதும், திமுகதான் என்னை தேர்ந்தெடுத்து அனுப்பியது. காங்கிரஸ் தயவில் நான் செல்லவில்லை’ என்றார். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. ஆனால் இது தொடர்பாக திமுக தரப்பில் இருந்து எந்த கருத்தும் முன்வைக்கப்பட வில்லை.
மதிமுக - காங்கிரஸ் மோதல்; இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - காங்கிரஸ்
சென்னை: மதிமுக - காங்கிரஸ் இடையே மோதல் நடைபெற்றுவரும் சூழலில் திமுக தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடக்க இருக்கிறது.
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்கு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துக் கட்சி கூட்டத்தின் நோக்கம் காஷ்மீர் பிரச்னைதான் என்றாலும் இதில் பல விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் காங்கிரஸ் - மதிமுக இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிகிறது. மேலும், உள்ளாட்சித் தேர்தல், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.