சென்னை: கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் நலமாக உள்ளார் என்றும் அவர் மாதம்தோறும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு செல்லுவது வழக்கம் தான் என்றும் கூறினார்.
தேமுதிகவின் உட்கட்சி தேர்தல் இன்னும் ஒரு மாத காலத்தில் நடைபெறவிருக்கிறது என்று தெரிவித்தார். உட்கட்சி தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக இன்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆகஸ்ட் 25 இல் விஜயகாந்த் 70ஆவது பிறந்த நாளும் செப்டம்பர் 14 கட்சியின் 18 ஆம் ஆண்டு தொடக்க விழாவும் வர இருக்கிறது. அதை எவ்வாறு தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் சிறப்பாக கொண்டாடலாம் என்று இந்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
தேமுதிகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதில் முனைப்போடு இருக்கிறோம். அதற்காக ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதிமுக செய்த தவறுகளால்தான் இன்று அவர்கள் ஆட்சியை இழந்து வருந்துகிறார்கள். நாங்கள் சொன்னதை அவர்கள் சரியான நேரத்தில் செய்திருந்தால் ஆட்சியில் இருந்திருப்பார்கள் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தான் உண்மையான எதிர்க்கட்சியாக தற்போது செயல்பட்டு வருகிறது என்று கூறினார். தமிழகத்தில் நடந்த அனைத்து பிரச்சனைக்கும் முதல் குரலாக தேமுதிக கொடுத்தது, மக்களுக்காக எங்களுடைய குரலை தைரியமாக கொடுத்திருக்கிறோம்.
இந்த அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். அதைப் பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது. யார் குற்றம் சாட்டுகிறார்கள் அவர்கள் அதை நிரூபிக்க வேண்டும். யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் முடிவு எடுப்பார். அவர் நல்ல நேரத்தில் நல்ல முடிவு எடுப்பார் எனக் கூறினார். மேலும் ஸ்காட்லாந்துக்கு நிகராக செயல்பட்ட தமிழக காவல்துறை இன்றைய மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியான நிலையில் உள்ளது.