இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் பணியில் ஈடுபட்டு நோய்த் தொற்றுக்கு ஆளாகி தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற ஓரிரு நிகழ்வுகள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கின்றது. அடக்கம் செய்யக் கொண்டு வரும் உடலை மறித்து, வன்முறையில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என்று காவல்துறை ஆணையர் விசுவநாதன் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி மறைந்த மருத்துவரின் துணைவியார் திருமதி. ஆனந்தியின் வேண்டுகோளை ஏற்று அந்த உடலைத் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்திலேயே அடக்கம் செய்ய ஆணையிட வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், மிகவும் புண்பட்ட நெஞ்சங்களோடு பணி செய்து கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கும், மருத்துவத் துறையினருக்கும் மிகுந்த ஆறுதலைத் தரும்.