தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாவட்ட நீதிபதிகள் தேர்வில் சலுகை - உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: மாவட்ட நீதிபதிகள் தேர்வில் பிற்படுத்தப்பட்டோருக்கு வயது வரம்புச் சலுகை வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

highcourt
highcourt

By

Published : Feb 6, 2020, 7:15 PM IST

தமிழ்நாட்டில் காலியாக இருந்த 32 மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு நேரடித் தேர்வு நடத்துவது தொடர்பாக, 2019 டிசம்பர் 12ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கான வயது வரம்புச் சலுகை நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கறிஞர்கள் காசிபாண்டியன், உதயகுமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

கடந்த முறை தேர்வு குறித்த அறிவிப்பாணையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 48 வயது வரை விண்ணப்பிக்கலாம் என வயது வரம்புச் சலுகை வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்த சலுகை மறுக்கப்பட்டது பாரபட்சமானது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஏ.பி. சாஹி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, ஷெட்டி கமிஷன் அறிக்கையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனியாக எந்தவித வயது வரம்புச் சலுகையும் வழங்கவில்லை என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான வயது வரம்பு 48 என்றும், இதரப் பிரிவினருக்கு 45 எனவும் நிர்ணயித்து, நீதித்துறை பணி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஷெட்டி கமிஷன் அறிக்கையில் வயது வரம்புச் சலுகை ஏதும் வழங்காததால், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: அமைச்சர் தொடங்கிவைத்த திட்டம் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பியவருக்குப் பிணை

ABOUT THE AUTHOR

...view details