இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "சமூக வலைதளங்களில் பரவும் மயிலாடுதுறை தனியார் கல்லூரி முதல்வரின் உத்தரவு எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒழுங்கு நடவடிக்கை என்று மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியிலிருந்து நீக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் மது அருந்தியதால் அவ்வாறு செய்துள்ளதாகத் தெரிந்தது. அந்த தனியார் கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மது அருந்துவது சட்டப்படி குற்றமல்ல. டாஸ்மாக் என்பது தமிழ்நாடு அரசின் மது கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனம் ஆகும். மது அருந்துவது குற்றமென்றால் அரசே அதை விற்காது.
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937இன்படி மது விற்பனையை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், அதை அரசே செய்ய வேண்டிய நிலையுள்ளது. சட்டம் இவ்வாறு இருக்கும்போது, நண்பர்களான ஆணோ, பெண்ணோ, இணைந்து மது அருந்துவதும் சட்டப்படி குற்றமல்ல. கடினமான உடல் உழைப்பு செய்யும் பெண் தொழிலாளர்கள், தங்கள் உடல் வலி நீங்க அவ்வப்போது மது அருந்தும் பழக்கம் கொண்டுள்ளனர்.