தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11, 12ஆம் வகுப்பு ஹால் டிக்கெட்டை தனித்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் - ஹால் டிக்கெட்

சென்னை: 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டை (தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

notice
notice

By

Published : Feb 18, 2020, 6:28 PM IST

இது தொடர்பாக அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மார்ச் 2020ஆம் ஆண்டு 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை 19ஆம் தேதி மதியம் முதல் ‘www.dge.tn.gov.in’ என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்கள், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.

ஏற்கனவே எழுத்துத் தேர்வெழுதி, எழுத்துத் தேர்வு, அகமதிப்பீடு ஆகிய இரண்டிற்கும் சேர்த்து 35 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்று, செய்முறைத் தேர்வில் பங்கேற்காத காரணத்தால் தேர்ச்சி பெறாதவர்கள், தற்போது செய்முறைத் தேர்வில் மட்டும் பங்கேற்க வேண்டும். அந்தவகை தேர்வர்கள் மீண்டும் எழுத்துத் தேர்வினை எழுத வேண்டாம்.

ஏற்கனவே செய்முறைத் தேர்வில் பங்கேற்காமல் எழுத்துத் தேர்வு, அகமதிப்பீடு ஆகிய இரண்டிலும் சேர்த்து 35 மதிப்பெண்ணுக்கும் குறைவாக பெற்று தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டையும் கட்டாயம் எழுத வேண்டும்.

செய்முறைத் தேர்வு செய்ய வேண்டிய தனித்தேர்வர்கள், கருத்தியல் தேர்வு நடைபெறும் நாள்களுக்கு முன்னரே அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி, செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதி குறித்த விவரத்தை அறிந்துகொள்ள வேண்டும்.

உரிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மார்ச் 2020 பொதுத்தேர்விற்கான கால அட்டவணையை ’www.dge.tn.gov.in’ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details