தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையால் பறிமுதல்செய்யப்பட்ட, உரிமையாளர்களால் மீட்கப்படாமல் கிடக்கும் மோட்டார் வாகனங்களை அகற்றி அதன் மூலம் அரசு கருவூலத்திற்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் காவல் துறை அலுவலருக்கு ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு விருது வழங்கப்படும் எனத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதற்காகப் பறிமுதல்செய்யப்பட்ட வாகனங்கள், விபத்தில் சிக்கி பறிமுதல்செய்யப்பட்ட வாகனங்கள், சாலை விதிகளை மீறியதற்காக காவல் துறையால் பறிமுதல்செய்யப்பட்டு உரிமையாளர்களால் மீட்கப்படாமல் இருக்கும் வாகனங்கள் என இருசக்கர வாகனங்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள், லாரி எனப் பல வகையான வாகனங்கள் அனைத்து மாவட்ட காவல் நிலையங்களிலும் குவிந்துவருகின்றன.
பொது ஏலம்
மேலும், ஏற்கனவே காவல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் இதுபோன்ற வாகனங்களைப் பொது ஏலத்தில் விட்டு அப்புறப்படுத்துமாறும், அதன்மூலம் கிடைக்கும் வருவாயை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறும் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் காவல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் மோட்டார் வாகனங்களை அகற்றி அதன்மூலம் அரசுக்கு வருவாயை அதிகரிக்கும் காவல் துறை அலுவலருக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி சிறப்பு விருது வழங்கப்படும் என சைலேந்திர பாபு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.