சென்னை:பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு தீபாவளியை போலவே, இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கும் சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.
1) காஜூ கட்லீ (250 கி)
2) நட்டி அல்வா (250 கி)
3) மோத்தி பாக் (250 கி)
4) காஜு பிஸ்தா ரோல் (250 கி)
5) நெய் பாதுஷா (250 கி)
6) கார வகைகள்
7) இனிப்பு தொகுப்பு (500 கி) (Combo Box)
தயாரிப்பு மற்றும் விற்பனை இலக்கு தொடர்பாக விரிவான ஆய்வினை பால்வளத்துறை அமைச்சர் மேற்கொண்டார். இதில், தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை மிகுந்த சுவைமிக்கதாகவும் மற்றும் தரமாக தயாரிக்கவும், கருப்பட்டியை பயன்படுத்தி சுவையான இனிப்பு வகைகளை தயாரிக்கும் வழிவகைகளை ஆராயவும் ஆலோசனை வழங்கினார்.
கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பொருட்கள் ரூ.82 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.200 கோடி வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து விற்பனை உத்திகளையும் கையாளவும், அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை வழங்க முன்கூட்டி திட்டமிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.