தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 15, 2022, 9:17 PM IST

ETV Bharat / city

புகார் கொடுத்தவர் இறந்துவிட்டால், புகாரும் இல்லாமல் போய்விடுமா - கேள்விகளால் துளைத்த நீதிமன்றம்

நில அபகரிப்புப் புகாரில் சிக்கிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை முடித்து வைத்த தமிழ்நாடு பார்கவுன்சிலின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் மீதான விசாரணையை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

advocates
advocates

சென்னை:தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வரதம்மாள் என்பவருக்குச் சொந்தமான 25 ஏக்கர் நிலத்தை, அவரது மகன் ஜெகன்நாதனை நிர்வகிக்க, வரதம்மாள் அதிகாரம் கொடுத்துள்ளார். இந்நிலையில், நாகராஜ் என்பவர் அந்த இடம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி, ராஜேந்திரன் என்பவரிடம் கடந்த 2004-ல் கடன் வாங்கியுள்ளார். இதை அறிந்த ஜெகன்நாதன் விசாரித்ததில், இடத்தை அபகரித்ததில் நாகராஜ், நாகேந்திரன் மட்டுமல்லாமல் ராஜாராம், ரவி, முத்துசாமி ஆகிய 3 வழக்கறிஞர்கள், இந்த மோசடிக்கு உதவி செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 3 வழக்கறிஞர்கள் மீதும் தமிழ்நாடு பார்கவுன்சிலில் ஜெகன்நாதன் புகார் கொடுத்தார். புகாரை விசாரித்த பார்கவுன்சில் 3 வழக்கறிஞர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, 2019 செப்டம்பர் 3ஆம் தேதி அவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், பார்கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் மீது நம்பிக்கை இல்லை என்றும் அதனால், மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் தலைமையில் குழுவை அமைத்து வழக்கறிஞர்கள் மீதான விசாரணையை நடத்த வேண்டும் எனக்கோரி, ஜெகன்நாதன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் ரவி மற்றும் முத்துசாமி ஆகியோர் மீதான விசாரணையை பார்கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதற்கிடையில் வழக்கு தொடர்ந்த ஜெகன்நாதன் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபரில் காலமானார்.

இதையடுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் சார்பில் பார்கவுன்சிலில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெகன்நாதனின் சட்டப்பூர்வ வாரிசுகளான தங்கள் மனுவை ஏற்று, வழக்கறிஞர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையைத் தொடர வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையைஜெகன்நாதன் இறந்ததால் நிராகரித்த பார்கவுன்சில், வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையை முடித்து வைத்தது.

இதை எதிர்த்து ஜெகன்நாதனின் மனைவி மற்றும் குழந்தைகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீதான விசாரணையை புகார்தாரர் இறந்துவிட்டார் என்ற காரணத்திற்காக முடித்துவிட முடியாது என்றும், புகார்தாரரின் வாரிசுகள் புகார்தாரருக்கு பதிலாக வழக்கைத் தொடர்ந்து நடத்த முடியும் என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் இதை உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

எனவே, வழக்கறிஞர்கள் ரவி மற்றும் முத்துசாமி ஆகியோர் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடித்துவைத்த, தமிழ்நாடு பார்கவுன்சிலின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். ஜெகன்நாதனின் வாரிசுகளான அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் மனுக்கள் ஏற்கப்படுகிறது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை புதிய குழு அமைத்து விசாரிக்கவும், விசாரணையை 3 மாதங்களில் முடிக்கவும் தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: விஷு புத்தாண்டு - சென்னையில் மலையாளம் பேசும் மக்கள் ஐயப்பன் கோயிலில் வழிபாடு

ABOUT THE AUTHOR

...view details