சென்னை:திமுக பிரமுகரான வழக்கறிஞர் ஜோயலைத் தொடர்புகொண்ட சிவக்குமார் என்பவர் தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறி புகைப்படம், மருத்துவச்சீட்டை அனுப்பி பண உதவி கேட்டுள்ளார். குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தங்களிடம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய ஜோயல் அவரது வங்கிக் கணக்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பினார். இது குறித்து உதயநிதியிடம் விசாரித்ததில், தான் யாரையும் அனுப்பவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த ஜோயல், இந்த மோசடி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அரசியல் பிரமுகர்களிடம் பணம் மோசடி
இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரணை நடத்தி புதுச்சேரியைச் சேர்ந்த சிவக்குமாரை கைதுசெய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இதுபோன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்.பி. விஜய்வசந்த், சீமான் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு குழந்தையின் புகைப்படம், மருத்துவச்சீட்டு உள்ளிட்டவற்றை அனுப்பி இதுவரை சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது.