சென்னை:திருவள்ளூர் மாவட்டம் வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்த ராஜசேகர் திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். போலீசார் தாக்கியதாலேயே ராஜசேகர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி, உடற்கூராய்வு முடிந்த நிலையிலும் உடலை வாங்க மறுத்து போராடி வருகின்றனர்.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கொடுங்கையூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ், உதவி ஆய்வாளர் கன்னியப்பன், தலைமை காவலர்களான ஜெயசேகர், மணிவண்ணன், முதல்நிலை காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி நேற்று (ஜூன் 14) உத்தரவிட்டுள்ளது.