கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி சிறப்பு அதிரடிப்படையினரால் சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது, அதிரடி படையில் இருந்த 752 பேருக்கு இரட்டை பதவி உயர்வு வழங்க அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அரசாணை ஒன்றை வெளியிட்டார்.
ஒருமுறை பதவி உயர்வு வழங்கப்பட்ட நிலையில், அதன் பின்னும் 752 பேருக்கும் பணிமூப்பு வழங்கப்பட்டது. இதனால் அதிரடிப்படையில் இடம் பெறாத பிற அலுவலர்களும், காவலர்களும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து, 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இரட்டை பதவி உயர்வு பெற்றவர்களுக்கான பணிமூப்பு வழங்கிய அரசாணை ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து அதிரடிப்படையினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு நிலுவையில் இருந்துவந்த சூழலில், 2013ஆம் ஆண்டு காவல் பணிகள் விதிகளில் திருத்தங்கள் கொண்டு வந்து பணிமூப்பு மீண்டும் வழங்கும் புதிய அரசாணையை அதிமுக அரசு பிறப்பித்தது.