சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான 60-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கடந்த வாரம் அதிரடியாக சோதனை நடத்தினர்.
குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் 811 கோடி ரூபாய் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியது.
இந்தச் சோதனையின்போது 13.50 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணமும், 2 கோடி ரூபாய் வைப்புத் தொகை தொடர்பான ஆவணங்களும், மாநகராட்சி ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின. மேலும் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வங்கிக் கணக்குகள், வங்கி லாக்கர்கள் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆய்வை மேற்கொண்டு வந்தனர்.
எதன் அடிப்படையில் பட்டியல்
இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், குறிப்பாக 2014 முதல் 2018ஆம் ஆண்டுவரை நடந்த சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகள் தொடர்பான டெண்டர்களில் விதிகளை மீறி ஒப்பந்தம் செய்த அரசு ஒப்பந்ததாரர்களின் பட்டியலை லஞ்ச ஒழிப்புத் துறை தயாரித்துள்ளது.
சோதனையின்போது கிடைக்கப்பெற்ற மாநகராட்சி ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் மூலம் இந்தப் பட்டியலைத் தயாரித்து உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.