சென்னை: தி.நகர், புரசைவாக்கம் போன்ற வணிக பகுதிகளில் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதாகவும் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதில்லை எனவும் சென்னை மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.
அதன் தொடர்ச்சியாக, தி.நகர் ரங்கநாதன் தெருவில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விசுமகாஜன், வட்டார துணை ஆணையர் சரண்யா, காவல் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சரவணா ஸ்டோர்ஸ், ஜெயசந்திரன் போன்ற பெரும் வணிக வளாகங்களிலும், சிறு குறு வணிக கடைகளிலும் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கரோனா நெறிமுறைகளை பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் பின்பற்றுக்கின்றனரா என்பதை பார்வையிட்டனர்.
மாநகராட்சி துணை ஆணையர் விசுமகாஜன் பேட்டி 100 தன்னார்வலர்கள் மூலம் விழிப்புணர்வு
பிறகு செய்தியாளர்களை சந்தித்த வட்டார துணை ஆணையர் சரண்யா, "சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் தி.நகர் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதாகவும் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதில்லை என தொடர்ந்து மாநகராட்சிக்கு புகார் வந்த நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது .
மேலும் 100 மாநகராட்சி தன்னார்வலர்கள் கொண்டு தொடர்ந்து தி.நகர், புரசைவாக்கம் போன்ற இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
15 மண்டலத்துக்கு 15 மண்டல ஊரடங்கு அமலாக்க குழு
தொடர்ந்து பேசிய மாநகராட்சி துணை ஆணையர் விசுமகாஜன், "சென்னை முழுவதும் மக்கள் அதிகம் கூடும் 43 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அங்கெல்லாம் மண்டல கண்கானிப்பு குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் 15 மண்டலத்துக்கு 15 மண்டல ஊரடங்கு அமலாக்க குழு தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் கூடும் தி.நகர் புரசைவாக்கம் போன்ற இடங்களில் இன்னும் ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, அவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
கடைகளுக்கு சீல் வைப்பது தவிர்ப்பு
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வர வேண்டும் ஏனென்றால் இன்னும் கரோனா முடியவில்லை. நாள்தோறும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கரோனா விதிகளை பின்பற்றவில்லை என அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடைகளுக்கு சீல் வைப்பது ஓரளவு தவிர்க்கப்படுகிறது, ஏனென்றால் கரோனாவால் அவர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எச்சரிக்கப்பட்டு அபராதம் மட்டும் விதிக்கப்படுகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொன் வேண்டாம் பொண்ணே போதும் - 'மாஸான' மாப்பிள்ளை