சென்னை: கரோனா தடுப்பூசி ஒத்திகை மையத்தில் ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தலாம் என சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் 17 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என ஏற்கனவே சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இச்சூழலில் இன்று சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வுசெய்தார்.
சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடில் ஒரே நேரத்தில் 17 இடங்களில் ஒத்திகை நடைபெற்றுவருகிறது. முதல்கட்டமாக ஆறு லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி ஒத்திகைக்குப் பதிவுசெய்துள்ளனர். மேலும் முன்களப் பணியாளர்கள் பதிவுசெய்யவுள்ளனர்.
ஒரு கரோனா தடுப்பூசி ஒத்திகை மையத்தில் ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம். ஒரு நபர் தடுப்பூசி ஒத்திகைக்கு வந்தால் முதலில் அவர் கொவின் செயலியில் பதிவுசெய்திருக்கிறாரா என்பது சரிபார்க்கப்படும். பின்பு அந்த நபர்தானா என்று உறுதிசெய்த பின்பு காத்திருப்பு அறையிலிருந்து தடுப்பூசி ஒத்திகை அறைக்கு கொண்டுச் செல்லப்படுவார்கள்.
தடுப்பூசி ஒத்திகை முடிந்ததும் அந்த நபர் கைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி அரசு சார்பாக அனுப்பப்படும். மேலும் தடுப்பூசி செலுத்திய பிறகு கண்காணிப்பு அறையில் அவர்கள் வைக்கப்படுவார்கள். அந்தக் கண்காணிப்பு அறையில் அனைத்து வகையான மருந்துகளும் இருக்கும். ஒரு விழுக்காடு அளவுக்கு ஏதாவது பின்விளைவு வரும். அந்தப் பின்விளைவு வந்தால் அதற்குத் தேவையான மருந்துகள் தயார் நிலையில் உள்ளது.
தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை இங்கு கண்காணிக்கப்படுவார்கள். முதல் நாள் என்பதால் 25 நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டது. ஆனால் ஒரு நாளைக்கு 100 நபர்களுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்த முடியும். இந்த ஒத்திகையின் மூலம் தடுப்பூசி போடப்படும் அறையைப் பெரிதாக்க வேண்டும் எனக் கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.