கரோனா வைரசுக்கான தடுப்பூசியை பொதுமக்களுக்கு அடுத்த மாதத்தில் போடுவதற்கான பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் கரோனா தடுப்பூசி போடுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் முதல் கட்டமாக 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழகத்தில் 27 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 303 அரசு மருத்துவமனைகள், 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 27 தனியார் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்ப்ட்டுள்ளன. அங்கு தடுப்பூசிகளை குளிர் சாதன வசதியுடன் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இதற்காக மாநிலம் முழுவதும் 8,713 கிராம சுகாதார செவிலியர்கள், 2 ஆயிரம் நகர சுகாதார செவிலியர்கள், 2,053 துணை செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் 2,220 பேர் மற்றும் 6,174 பேர் என 21,170 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா தடுப்பூசியை அனைவரும் எதிர்பார்த்துள்ள இந்த சூழலில், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நமது இடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியின் கேள்வி பதில் தொகுப்பு இதோ,
கேள்வி: தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கரோனா தற்போது கட்டுக்குள் வந்திருப்பதற்கு என்ன மாதிரியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது?
ராதாகிருஷ்ணன்: முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி சோப்பு போட்டு கையை கழுவுதல் போன்ற அரசு கூறியவற்றை மக்கள் பெரிதும் பின்பற்றியதே இதற்கு முக்கியக் காரணம். ஆனாலும், கரோனா சவால் இன்னும் குறையவில்லை.
கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள், ஆர்டிபிசிஆர் பரிசோதனை, நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டோம். வீட்டில் இருந்தவர்கள் பலர் பரிசோதனைக்கு வர மறுத்த போதும், பல்வேறு முறைகளில் அவர்களிடம் எடுத்துக்கூறி புரிய வைத்தோம்.
திருமணம், இறப்பு நிகழ்வுகள், உணவகங்கள், விடுதிகள் போன்றவற்றில் சேர்ந்து உணவு உண்ணும் போது, அங்கு யாராவது நோய் பாதித்தவர் இருப்பின் அவர் மூலமாக மிக எளிதாக இத்தொற்று மற்றவர்களுக்கு பரவுகிறது. அது மாதிரியான பகுதிகளை கண்டறிந்து கட்டுப்படுத்துகிறோம்.
மேலும், இறப்பு விகிதத்தை குறைத்து, தொற்றுப் பரவலை தடுத்து வருவதோடு, அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பை வலுப்படுத்தி உயர்தர சிகிச்சை அளித்து வருகிறோம்.