சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று கேள்வி நேரத்தின்போது, மேட்டூர் சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை, அரசால் அமைக்கப்பட்டு வரும் அம்மா மினி கிளினிக்குகளை கிராமப்புறங்களின் தேவைக்கேற்ப மேலும் அதிகரிக்க வேண்டும் எனக் கோரினார். மேலும், அடிக்கடி மக்களை சந்திக்கக் கூடிய மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் தற்போது வரை 7 லட்சத்து 34 ஆயிரத்து 951 பேர் அம்மா மினி கிளினிக் மூலம் பயன் பெற்றுள்ளனர். மினி கிளினிக்குகளின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்படும். அதே போல மாநிலத்தில் தற்போது வரை ஒரு லட்சத்து 33 ஆயிரம் முன்களப்பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அடுத்தக்கட்டமாக உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை என பல துறைகளில் உள்ள 8 லட்சம் முன்களப்பணியாளர்கள் தடுப்பூசி போட அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.