சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்புகள் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் இன்று (ஏப். 25) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் புதிதாக 17 ஆயிரத்து 240 பேருக்கு கரோனா தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 54 பேருக்கும், அசாமில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என மொத்தம் 55 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
சிகிச்சையில் உள்ளவர்கள்:இதனால், தமிழ்நாட்டில் இதுவரை 34 லட்சத்து 53 ஆயிரத்து 607 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 362 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
மாவட்ட வாரியாக பாதிப்பு:மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நோயாளிகளில் 27 பேர் குணமடைந்தநிலையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 220ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 37 பேர், செங்கல்பட்டில் 5 பேர், ராமநாதபுரம், சிவகங்கையில் தலா மூன்று பேர், விருதுநகரில் இரண்டு பேர், வேலூர், சேலம், புதுக்கோட்டை காஞ்சிபுரம் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 55 பேருக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.