தண்டையார்பேட்டையில் இன்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், ” ஐஐடியில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் கரோனா ஹாட்ஸ்பாட்டாக சென்னை ஐஐடி மாறியுள்ளது. நேற்று வரை 104 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 79 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு சென்னை ஐஐடி கரோனா பரவல் ஒரு பாடம். தொற்று பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால், அங்குள்ள மாணவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது “ என்றார்.